மண்ணின் மைந்தனை வழியனுப்பி வைக்கும் இறுதி நாளில், வல்வெட்டித்துறை நகர் வர்த்தகர்கள் முழுமையாகக் கடைகளை அடைத்துத் தமது மரியாதையைச் செலுத்தி வழியனுப்பியுள்ளனர்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அவர் வசித்த கல்றோட் வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறை இல்லத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காலை 10 மணி அளவில் அன்னாரது பூதவுடல் வல்வெட்டித்துறைச் சந்தியில் பொதுமக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.
அங்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தமிழ்த்தேசிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் வணக்கம் இடம்பெற்றதன் பின்னர், இறுதிக்கிரியைகள் யாவும் நிறைவுபெற்று வல்வெட்டித்துறை – ஊறணி இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், பொது அமைப்புகள், தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்தேசியத் தலைவர்கள், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.






