தேடப்படும் ஐந்து உயிர்களும், மறக்கப்பட்ட 300 மரணங்களும்…!

You are currently viewing தேடப்படும் ஐந்து உயிர்களும், மறக்கப்பட்ட 300 மரணங்களும்…!

“டைட்டான்” நீர்மூழ்கியில் அகப்பட்டு காணாமற்போன ஐந்து பேரை தேடும் பணிகள் தொடர்பான செய்திகள், செய்தியூடகங்களையும், சமூகவலைத்தளங்களையும் ஆக்கிரமித்திருக்கும் அதேநேரம், கிரீஸ் நாட்டு கடற்பகுதியில் கடலில் மூழ்கி இறந்த 300 உயிர்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையென ஆங்காங்கே கண்டனக்குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

மீன்பிடி கப்பலொன்றில் இத்தாலி நோக்கி புறப்பட்ட 750 இருக்கும் அதிகமான லிபிய மற்றும் பாகிஸ்தானிய ஏதிலிகள் பயணம் செய்த குறித்த மீன்பிடி கப்பல் கடலில் கவிழ்ந்ததில் பல நூற்றுக்கணக்கான ஏதிலிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். பாகிஸ்தானிய அதிகாரிகளின் முதற்கட்ட அறிக்கையின் பிரகாரம், சுமார் 300 பாகிஸ்தானியர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு துயரச்சம்பவங்களும் சமகாலத்தில் நடைபெற்றிருந்தாலும், நீர்மூழ்கி காணாமற்போன விடயத்துக்கு மட்டும் அதீதமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், கிரீஸ் கடற்பகுதியில் உயிரிழந்த 300 உயிர்கள் தொடர்பான செய்தி மறக்கடிக்கப்பட்டுள்ளதாக உலகளாவிய ரீதியில் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்மூழ்கியில் சிக்கியிருப்பவர்கள் உலகறிந்த பெரும் செல்வந்தர்கள் என்பதோடு, அவர்களில் பாகிஸ்தானிய பின்னணியை கொண்டுள்ள “தாவூத்” என்ற வர்த்தக செல்வந்தர், பிரித்தானிய அரசர் “சார்ள்ஸ்” அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பிலிருப்பவர் என்ற வகையில், குறித்த நீர்மூழ்கியை இயக்கும் நிறுவனத்துடன் பிரத்தியேகமாக தொடர்புகொண்டிருந்த பிரித்தானிய அரசர், நீர்மூழ்கியில் சிக்கியிருப்பவர்களை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென பிரத்தியேக வேண்டுகோள் விடுத்திருந்தாரென முன்னதாக செய்தியொன்று வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்திலாந்திக் கடலில் நீர்மூழ்கிக்குள் சிக்கியுள்ளவர்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்பது எந்தளவு முக்கியமோ, அந்தளவுக்கு, மத்தியதரைக்கடலில் சிக்கி உயிரிழப்பவர்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் பலமாக எழுந்துள்ளன. மேலை நாடுகளின் ஆதிக்கப்பசிக்கும், போர்ப்பசிக்கும் பலியாகும் நாடுகளில் ஏதிலிகளாக்கப்படுபவர்கள், புகலிடம் தேடி ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு, மத்தியதரைக்கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதும், இவ்வாபத்தான கடற்பயணங்களின்போது பெருமளவிலான ஏதிலிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பது சர்வசாதாரணமான விடயமாக ஆகிவிடுவதும் குறிப்பிடத்தக்கது.

நீர்மூழ்கியில் சிக்கியுள்ள ஐந்து உயிர்களை மீட்கும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதிக வளங்களும் பாவிக்கப்படும் அதேநேரம், நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும் மத்தியதரைக்கடலில் நிகழும் அனர்த்தங்களில் சிக்கிக்கொள்பவர்களை காப்பாற்றவும், இதுபோன்ற அவலங்கள் மேற்கொண்டு நடைபெறாமல் தடுக்கும் முயற்சிகளுக்கும் போதிய வளங்கள் பாவிக்கப்படுவதில்லை எனவும், இதற்கு முக்கியத்த்துவமும் கொடுக்கப்படுவதில்லை எனவும் பலத்த கண்டனங்கள் எழத்தொடங்கியுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply