ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறிய அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் சில முக்கிய நிபந்தனைகளை புறக்கணித்தது.அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் அணு சக்தி ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையை மீறி அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியம் செறிவூட்டுதலை 3.67 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக ஈரான் உயர்த்தியது. இந்தநிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக செறிவூட்டப்பட்ட யுரேனிய உலோகத்தை உற்பத்தி செய்யும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அணு உலைக்கு தேவையான எரிபொருளை உருவாக்குவற்காகவே இந்த யுரேனிய உலோகம் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அதே சமயம் இந்த யுரேனிய உலோகம் ஒரு அணு குண்டின் மையத்தை உருவாக்க பயன்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக யுரேனிய உலோகத்தை உற்பத்தி செய்யும் ஈரான் நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் ‘‘ஈரானின் இந்த செயல் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறுவது ஆகும். அதுமட்டுமின்றி அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடந்துவரும் பேச்சுவார்த்தையை இது அச்சுறுத்துகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஈரானின் இந்த நடவடிக்கை மிகுந்த கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.