பிரபல பாடலாசியரும், நடிகருமான கபிலனின் மகள் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கவிஞர், நடிகர் என அறியப்படும் கபிலனின் மகள் தூரிகை. எழுத்தாளரான தூரிகை, சில வருடங்கள் முன்புவரை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். கடந்த 2020ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine) என்னும் டிஜிட்டல் இதழை தொடங்கி, பெண்களுக்கான பத்திரிகையாக நடத்திவந்தார்.
மேலும் ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை கபிலன். முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, நேற்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் 16ஆம் திகதி ‘Being Women Magazine’ இதழ் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி சென்னை ஐஐடி வளாகத்தில் ‘Friendship Icon Award’ என்ற பெயரில் ஒரு அவார்டு ஷோவை நடத்த திட்டமிட்டு வந்துள்ளார் தூரிகை.
கடந்த சில வாரங்களாக, அதற்கான வேலைகளில் தான் மும்முரமாக உற்சாகமாக ஈடுபட்டு வந்த நிலையில் தான் இந்த சோகமான முடிவை எடுத்திருக்கிறார். தூரிகை மரணம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன்.
தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.