அமெரிக்க பாதுகாப்புத்துறையான “Pentagon” இலிருந்து கசிந்ததாக சொல்லப்படும் இரகசிய அறிக்கையின்படி, அமெரிக்கா தனது நெருக்கமான நட்பு நாடுகளையும் உளவு பார்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல்களை வெளியிட்டுள்ள “CNN” செய்தி நிறுவனம், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான இஸ்ரேல், தென் – கொரியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க உளவுத்துறை உளவு பார்த்து வந்துள்ளதாகவும், “Pentagon” இலிருந்து கசிந்துள்ள இரகசிய அறிக்கைகளில், மிகமிக தனிப்பட்டவை எனக்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் பட்டியலில் இவ்விடயமும் அடங்குவதாக தெரிவித்துள்ளதோடு, இதனால் குறிப்பிட்ட நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் பாதகமேற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவுக்கெதிராக பாவிப்பதற்கு தென் – கொரியாவின் “ஆட்லறி” எறிகணைகளை அமெரிக்காவுக்கு கொடுப்பது தொடர்பில் அமெரிக்காவுக்கும், தென் – கொரியாவுக்கும் இடையில் நடைபெற்ற அதியுச்ச அரசுமுறை சந்திப்புக்கள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளமையானது, தென் – கொரிய அரசை விசனத்துக்குள்ளாக்கியுள்ளது எனவும் “CNN” மேலும் தெரிவிக்கிறது.
இதேபோல, இஸ்ரேலிய அரசுத்தலைமைக்கெதிராக எதிர்ப்புக்களை காட்ட வேண்டுமென, இஸ்ரேலிய உளவுத்துறையான “Mossad”, தனது பணியாளர்களுக்கும், ஏனைய இஸ்ரேலியர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தது என்கிற தகவலும், அமெரிக்க “CIA” தரப்பிலிருந்து கசிந்துள்ள இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை, இஸ்ரேலிய அரச மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படும் அதேவேளை, இஸ்ரேலிய அரசுக்கெதிரான போராட்டங்கள் இஸ்ரேலை கடந்த சில நாட்களாக உலுக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயம் தொடர்பில் “AL Jazeera” நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில், இஸ்ரேலிய “Mossad” தொடர்பாக அமெரிக்க “CIA” கசியவிட்ட அறிக்கையானது ஆதாரமற்ற பொய்யான தகவல்களை கொண்டுள்ளதென இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.