முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் வட்டுவாகல் மற்றும் சாலை கடல் நீர் ஏரிகள் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளதுடன் இரண்டினையும் கடலோடு சேர வெட்டிவிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை வெள்ளம் காரணமாக நந்திக்கடல் நீர் ஏரி நிரம்பியுள்ளதால் வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக வெள்ளநீர் வழிந்தோடிவருகின்றது இதனால் இந்த பாலம் ஊடாக போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
இதேவேளை சாலைக்கடல் நீர் ஏரியும் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
இரட்டைவாய்க்கால் சாலை வீதியில் மழைவெள்ளம் நிரம்பி காணப்படுகின்றது சுமார் 5 கீலோமீற்றர் தூரத்திற்கு வெள்ள நீர் காணப்படுவதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் வலைஞர் மடம்,அம்பலவன் பொக்கணை,மாத்தளன் மக்களின் போக்குவரத்து மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் தாள் நில பிரதேசங்களை அண்டிய விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. விவாசய செய்கைக்கு செல்லும் மூன்று பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.