நம்பிக்கையூட்டும் கார்த்திகை
கார்த்திகை பூக்களின் காலடி
தொழுது
மேகத்திரைகள் ஒன்றாய் கூடி
தாகம் தேடிய குழந்தைகளின்
கல்லறைகள் தேடி
மழைத்துளிகள் மௌனமாய்
மானவீரரின் மடிமீது
முத்தமிடுகின்றன!
பத்து திங்கள் சுமந்த
நித்திய புன்னகைகளின்
நீர்விழிகள் கட்டுடைத்து
விதைத்த குழிகளில்
கனத்த நினைவுகளோடு
மண்ணிடை செல்லும்
நீர்த்துளிகளில்
கார்த்திகை திங்கள்
கண்மலர்கின்றன!
மேனிதடவிப்போகும்
வெண்பனிக்காற்று
இன்னும் சூடுதணிய
மறுக்கிறது!
தாவி எழும் சிறுத்தையின்
சினமாய்
உறுமி எழுகிறது!
புதைந்து கிடக்கும்
புனிதர்களின்
கனவுகளை காதலித்து
நீதியின் முன்
நிசியினை வீசி எறிய
விரைகிறது.
நிரை நிரையாய்
ஒளிரும் கார்த்திகை
விளக்குகளில்
கல்லறையின்
கலங்கரை விளக்கு
ஒளிர்கிறது!
நுரைகள் பொங்கியெழும்
அலைகளிடையே
கரைகாணும்
கண்களில்
நம்பிக்கை
துளிர்க்க
கார்த்திகை முகங்கள்
மீண்டும்
உயிர்க்கிறது!
✍️தூயவன்