அமெரிக்க மண்ணிலிருந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக அடுத்த மாதம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
விண்வெளியில் பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) இரண்டு வீரர்களை அழைத்து செல்லும் இந்த திட்டம் மே மாதம் 27 மேற்கொள்ளப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
விண்வெளி வீரர்களை தாங்கி செல்லும் விண்கலம் (Spacecraft) மற்றும் ஏவூர்தி (Rocket) ஆகிய இரண்டையுமே தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான “SpaceX” தயாரித்துள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் நாசாவின் விண்கலம் கடந்த 2011ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது முதல் இதுவரை ரஷ்யாவின் உதவியை அமெரிக்கா பெற்றுவந்தது.
இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில், உலகின் மிகப் பெரிய பணக்கார தொழில் முனைவோர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், நாசாவின் வீரர்களை விண்வெளிக்கு அழைத்து சென்ற முதல் தனியார் நிறுவனமாக உருவெடுக்கும்.
நாசாவின் வரலாற்று சிறப்பு மிக்க 29 A ஏவுத் தளத்திலிருந்து பால்கான் ஒன்பது (Falcon 9) என்ற ஏவூர்தியும், கிரியூ ட்ராகன் (Crew Dragon) என்ற விண்கலமும் விண்வெளிக்கு சீறிப்பாய உள்ளன.
பாப் பெஹன்கென் (Bob Behnken) மற்றும் டக் ஹர்லி (Doug Hurley) ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களுக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட 24 மணிநேரமாகும்.
தற்சமயம் ரஷ்யாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர்.