நாட்டு எல்லைகளை மூடும் “செக்கியா”! “கொரோனா” பரவலை தடுக்க முயற்சி!!

You are currently viewing நாட்டு எல்லைகளை மூடும் “செக்கியா”! “கொரோனா” பரவலை தடுக்க முயற்சி!!

ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும் “கொரோனா” பரவலை தடுப்பதற்காக, “செக்கியா” நாடு, எதிர்வரும் 30 நாட்களுக்கு தனது எல்லைகளை மூடுவதாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பா உட்பட, “கொரோனா” தாக்குதல் அதிகமாக உள்ள 15 நாடுகளிலிருந்து யாரும் தனது நாட்டுக்குள் வருவதை தடை செய்து உத்தரவு விடுத்திருக்கும் “செக்கியா” வின் தடைப்பட்டியலில் நோர்வேயும் அடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“கொரோனா” பரவலையடுத்து, பிரித்தானியா தவிர்ந்த அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் தடை விதித்து அமெரிக்க அதிபர் நேற்று உத்தரவு பிறப்பித்ததையடுத்து, இன்று “செக்கியா” இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

சீனா, தென் கொரியா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின், ஒஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சலாந்து, சுவீடன், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரித்தானியா, டென்மார்க், நோர்வே உள்ளிட்ட நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, “செக்கியா” குடிமக்கள், மேற்படி 15 நாடுகளுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து முன்கூட்டிய உள்நுழைவு அனுமதி (வீஸா) பெறாமல் தமது நாட்டுக்குள் பயணிகள் வரும் முறைமையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக “வியட்னாம்” மற்றும் “தாய்லாந்து” ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

நோர்வேயோடு நில எல்லைகளை கொண்டிருக்கும் “ரஷ்யா” வும், எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நோர்வேயிலிருந்து ரஷ்ய எல்லைக்குள் பிரவேசிப்பவர்கள் கடுமையான பரிசோதனைகளுக்கு முகம்கொடுக்கவேண்டி வருமென ரஷ்ய அதிகாரிகள், நோர்வே எல்லைக்காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி மேம்பாடு:

“துர்க்மெனிஸ்தான்” நாடும், நோர்வேயிலிருந்து பயணிகள் தனது நாட்டு எல்லைக்குள் வருவதை தடை செய்துள்ளதாக இன்று 13.03.2020 அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள