நோர்வேயில் வேகமாக பரவும் “கொரோனா”! நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார், நோர்வே பிரதமர்!

You are currently viewing நோர்வேயில் வேகமாக பரவும் “கொரோனா”! நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார், நோர்வே பிரதமர்!

வேகமாக பரவிவரும் “கொரோனா” வைரசை கட்டுப்படுத்துவதற்காக இறுக்கமான முன்னேற்பாட்டு அறிவுறுத்தல்களை நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார் அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக பிரதமர் ஆற்றிய உரையில், வேகமாக பரவிவரும் “கொரோனா” வைரசை எதிர்த்து போராடுவதற்கு நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இறுதியாக வந்த தகவல்களின்படி, கீழ்க்காணும் இறுக்கமான முன்னேற்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

  • நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்கள், சிறுவர் பாடசாலைகள், இடைநிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், உயர்கல்விநிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்விநிலையங்களும் மூடப்படும்.
  • சுகாதார சேவைகள் உள்ளிட்ட 15 அத்தியாவசிய சேவைகளுக்கு இக்கட்டுப்பாடுகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.
  • மேற்குறிப்பிட்ட 15 அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பெற்றோர்களின் குழந்தைகளின் கவனிப்புக்காகவும், விசேட தேவையுள்ள குழந்தைகளின் பராமரிப்புக்காகவும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களும், சிறுவர் பாடசாலைகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
  • கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள் போன்றவை இரத்து செய்யப்படுவதோடு, உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் நிலையங்கள், சிகையலங்கார நிலையங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட, இந்த வகைக்குள் அடங்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது சேவைகளை நிறுத்த வேண்டும். 
  • உணவுச்சாலைகள், சிற்றுண்டி நிலையங்கள் போன்றவை, அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அமரும் இருக்கைகள் ஒவ்வொன்றுக்குமிடையில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதி அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் வழமைபோலவே இயங்கும். அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க வேண்டிய தேவையேதும் இல்லையென்பதால், மக்கள் அதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். வீடுகளில் எவ்வாறான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்கலாம் என்பது தொடர்பில், தேசிய பாதுகாப்பு அதிகார மையத்தின் அறிவுறுத்தல்களையே பின்பற்ற வேண்டும்.
  • போக்குவரத்துக்கள் வழமைபோல் நடைபெறும். எனினும், மக்கள் அனாவசிய உல்லாசப்பயணங்களை தவிர்க்க வேண்டும். 
  • நாடு முழுவதிலும் உள்ள சுகாதார மையங்களுக்கு மக்கள் அனாவசியமாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. 
  • நோயாளர்களோடு நேரடியான தொடர்பில் பணிபுரியும் சுகாதாரத்துறை பணியாளர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படாதிருக்கும் வண்ணம்,  நாட்டைவிட்டு வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • “நோர்டிக்” நாடுகளுக்கு வெளியிலிருந்து நோர்வேக்குள் வரும் அனைவரும், குறைந்தது 14 நாட்களுக்கு தனிமையில் இருக்கவேண்டும். “கொரோனா” தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்த விதி நாட்டுக்குள் வரும் அனைவருக்கும் பொருந்துவதோடு, 27.02.20 இற்கு முன்னதாக நோர்வேக்குள் வந்தவர்களுக்கும் இவ்விதி பொருந்தும்.
  • அத்தியாவசிய வேலைத்தளங்களில் பணிபுரிபவர்களின் வசதிகளை கவனத்தில் கொண்டு, பொதுப்போக்குவரத்துக்கள் யாவும் வளமை போலவே இயங்கும். எனினும், பொதுப்போக்குவரத்துக்களில் பயணிப்பவர்கள், பரிந்துரைக்கப்பட்டதன்படி, முடியுமானளவு, சக பயணிகளிடமிருந்து, ஆகக்குறைந்தது ஒரு மீட்டர் தூரம் விலகியிருக்க வேண்டும்.
  • உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என கருதப்படுபவர்கள் கூடியிருக்கும் இடங்களுக்கோ, வயதானவர்கள் பராமரிக்கப்படும் இடங்களுக்கோ அல்லது, இவ்வைகைக்குள் அடங்கும் ஏனைய இடங்களுக்கோ அனாவசியமாக செல்லுதல் தவிர்க்கப்பட்டுள்ளது.
  • சுகாதாரத்துறை சார்ந்த பணியாளர்களின் தொழின்முறையான, மற்றும் தனிப்பட்ட வெளிநாட்டுப்பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், அவர்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கான நிவாரணம் வழங்கப்படும். எனினும், எதிர்வரும் ஏப்ரல் மாத முடிவுவரையே நிவாரண கொடுப்பனவு நடைமுறையில் இருக்கும்.

மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் 12.03.2020 அன்று, மாலை 18:00 மணியிலிருந்து நடைமுறைக்கு வருவதோடு, 26.03.2020 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டாலும், அவசியமேற்படின் இவை மேலும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயின் சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி, நோர்வேயில் சுமார் 7.80.000 பேர் வரையில் “கொரோனா” தொற்றுக்கு ஆளாகலாம் என்றும், சுமார் 30.000 பேர் வரையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படலாம் என்றும், சுமார் 7600 பேருக்கு அதிதீவிர சிகிச்சை தேவைப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.vgtv.no/193836?jwsource=cl


பகிர்ந்துகொள்ள