இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 4 இலக்குகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய துடுப்பாட்ட அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 பந்து பரிமாற்ற போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.
இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் துடுப்பாட்ட போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களில் இந்திய அணி 4 இலக்குகள் இழப்புக்கு 347 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 103 ஓட்டங்களும், லோகேஷ் ராகுல் 88 ஓட்டங்களும் (64 பந்துகள்) அடித்தனர். அணித்தலைவர் விராட் கோலி 51 ஓட்டங்கள் அடித்தார். இதையடுத்து 348 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை அடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் (32) மற்றும் நிக்கோல்ஸ் (78) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதேபோன்று லாத்தம் (69) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மற்றவர்கள் குறைந்த ஓட்டங்களே எடுத்திருந்தனர்.
இதனிடையே, 43 பந்து பரிமாற்றங்கள் முடிவில் 99 ஓட்டங்கள் எடுத்திருந்த ராஸ் டெய்லர், அடுத்து குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து சதம் கடந்துள்ளார். இவற்றில் 4 ஆறுகள், 10 நான்குகளும் அடங்கும். தொடர்ந்து விளையாடிய அந்த அணி அடுத்தடுத்து 2 இலக்குகளை இழந்தது.
எனினும், அடுத்து வந்த சான்ட்னெர் ஒரு நான்கு மற்றும் ஒரு ஆறு என அடித்து 12 ஓட்டங்கள் எடுத்தும், டெய்லர் 109 (84 பந்துகள்) ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 48.1 பந்து பரிமாற்றங்களில் 6 இலக்குகள் இழப்பிற்கு 348 ஓட்டங்கள் எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.