“கொரோனா” வைரசு நாளுக்கு நாள் தன்னைத்தானே மாற்றத்துக்குள்ளாக்கி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறித்த வைரசு, அது வெளிப்பட்ட காலப்பகுதியில் மிகக்கடுமையானதாக இருந்ததாகவும், இப்போது, அந்தளவுக்கு கடுமையாக இல்லாமல் ஓரளவுக்கு வீரியம் குறைந்த நிலைக்கு மாறியிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தான் உயிர்வாழ்வதற்கும், அதிகளவில் பரவுவதற்கும் பொருத்தமான இடங்களை அடையும் வரையும் அதி வீரியமாக இயங்கும் “கொரோனா” வைரசு, தனக்கு வாய்ப்பான இடத்தை அடையும்போது தனது வீரியத்தை குறைத்துக்கொள்கிறது எனவும், உதராணமாக, வீரியத்தோடு ஒரு மனிதரின் உடலை அடைந்து அங்கு நிலை பெறும் வைரசு, தொடர்ந்து அதே வீரியத்தோடு இருக்குமானால், குறித்த மனிதர் விரைவில் இறந்து விடும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அதனால், வைரசும் நெடுநாள் வாழும் வாய்ப்பும் அதன் பரம்பலுக்கான வாய்ப்பும் குறையும் என கருத்தும் ஆய்வாளர்கள், அதனாலேயே வைரசுக்கள் தமது வீரியத்தை குறைத்துக்கொள்கின்றன எனவும் புரிந்துகொள்ள முடிவதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் அதி வீரியத்தோடு பரவும் வைரசுக்கள், தகுந்த இடத்தையும், சூழலையும் அடையும்போது தமது வீரியத்தை குறைத்துக்கொள்வதால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கும், விரைவாகவும், அதிகளவிலும் பரவுவதற்குமான உத்தரவாதத்தை பெற்றுக்கொள்கின்றன என மேலும் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், “கொரோனா” வைரசு இப்போது வேகமாக பரவி வந்தாலும், அதன் வீரியம் குறைவாக உள்ளதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
“கொரோனா” வைரசு பரவ ஆரம்பித்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை விடவும், தற்போது நிலவும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் அதிகமான தொகையில் வைரசுக்கள் அவதானிக்கப்படுவதாகவும், முன்பைவிட தம்மை மாற்றத்துக்குள்ளாக்கியிருக்கும் இவ்வைரசுக்கள், மனித உடலின் அதிகமான கலங்களை சென்றடையும் விதத்தில் தம்மை மாற்றம் செய்திருக்கின்றன என்பதும் ஆய்வுகளிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. எனினும், முன்னரை விடவும் உயிராபத்தை ஏற்படுத்தும் நிலையில் இந்த மாற்றமடைந்த வைரசுக்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயின் “Trondheim” பெருநகரத்தில் சென்றவாரம் அவதானிக்கப்பட்ட, தன்னைத்தானே மாற்றிக்கொண்டுள்ள “கொரோனா” வைரசின் புதிய வகையானது எங்கிருந்து பரவியது என்பதை அறிய முடியாதுள்ளது என தெரிவிக்கப்படும் அதேவேளை, இதுவரை செய்யப்பட்ட தேடல்களில் இது போன்ற வகையான வைரசு உலகில் எங்குமே அவதானிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வெகு வேகமாக பரவக்கூடிய இப்புதிய வகை வைரசு, தொற்று ஏற்படுபவர்களை மிக வேகமாக பாதிப்புக்குள்ளாக்கினாலும், முன்னைய வைரசு போன்ற வீரியத்தை கொண்டிருக்கவில்லை என “Trondheim” நகர தலைமை வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.