உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை நேற்று திங்கட்கிழமை (4) வாசிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் அவ்வறிக்கை கடந்த வெள்ளிக்கிழமையே (1) வாசிக்கப்பட்டது. அத்தோடு இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவினால் பதில் வழங்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்றைய தினம் இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரின் 12 கூட்டத்தில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பங்கேற்புடனான விவாதம் நடைபெற்றது.
இதன்போது பிரிட்டன், கனடா, வட மெசிடோனியா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் அமெரிக்கா ஆகிய இலங்கையின் இணையனுசரணை நாடுகளின் சார்பில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் சர்வதேச தூதுவர் ரீட்டா ஃப்ரென்ச் மேலும் கூறியதாவது:
இலங்கையைப் பொறுத்தமட்டில் அண்மையகாலங்களில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சிவில் இடைவெளி ஆகியவற்றுடன் தொடர்புடைய சில முக்கிய சட்ட உருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக இவற்றில் சில சட்ட உருவாக்கங்கள் தீவிர கரிசனையைத் தோற்றுவிப்பவையாக அமைந்துள்ளன.
குறிப்பாக நிகழ்நிலைக்காப்பு சட்டமானது நிகழ்நிலை தொடர்பாடலை தீவிரமாக மட்டுப்படுத்தக்கூடியதும், அனைத்துவித வெளிப்படுத்தல்களையும் குற்றமாக்கக்கூடியதும், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின்மீது மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுமான சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. எனவே இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளுக்கு ஏற்புடைய வகையில் அச்சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அதேபோன்று இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு ஏற்புடைய சட்டத்தினூடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யுமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். கடந்த நவம்பர் மாதம் தடுத்துவைக்கப்பட்ட 9 தமிழர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் மிகநீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுவிக்குமாறும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அடுத்ததாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை அவதானித்துள்ளோம். ஆனால் எந்தவொரு சட்டத்தையும் உருவாக்க முன்னர் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான அனைவரையும் உள்ளடக்கிய செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது இன்றியமையாததாகும். எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் சுயாதீனமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அர்த்தமுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியதாகவும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டியது அவசியமாகும்.
அதுமாத்திரமன்றி அடிப்படை சுதந்திரத்திலும், சிவில் சமூக இடைவெளியிலும் தீவிர மட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை கொண்டுவருதாக இருந்தால், அதுகுறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம்.
மேலும், காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கடப்பாட்டை வரவேற்கின்றோம். ஆனால் குறிப்பாக நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புடன் தொடர்புடையவகையில் அதிகரித்துவரும் அமைதியின்மை நிலைவரம் குறித்தும் நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம். எனவே இச்சவால்களை உரியவாறு கையாள்வதற்கு உங்களுடனும் (உயர்ஸ்தானிகர்), உங்களது அலுவலகத்துடனும் இணைந்து பணியாற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் 51/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்