நியூசிலாந்தின் ஒக்லாந்து புறநகரான நியூ லினில் உள்ள வணிக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கி குறைந்தது ஆறு பேரை காயப்படுத்திய பின்னர் காவல்த்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டவர் நியூசிலாந்தில் 10 வருடங்களாக வசித்துவரும் இலங்கையர் என தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்டவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளராக அடையாளம் காணப்பட்டு, தொடர்ந்து பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.
அப்பாவி நியூசிலாந்து மக்கள் மீது ஒரு வன்முறை தீவிரவாதி பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டார் என தாக்குதலை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஆதரிப்பவராக கடந்த 5 வருடங்களாக தன்மை அடையாளப்படுத்தி வந்த இலங்கையைச் சோ்ந்த இந்த நபர், வணிக வாளகத்தில் தாக்குதலை நடத்திய 60 விநாடிகளில் விரைவாகச் செயற்பட்ட காவல்த்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் நடத்திய இந்தத் தாக்குதலில் காயமடைந்த 06 பேரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஒக்லாந்து காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.