நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னான தொடர் மீட்ப்புப்பணிகள் தொடர்ந்துவந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று கண்டெடுக்கப்பட்டிருந்தவரின் பெயர் விபரங்கள் இன்று மாலை வெளியிடப்பட்ட அதே சமயத்தில், மேலும் 3 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரின் சடலங்களும் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும், இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மேலும் தேடுதல் நடாத்த வேண்டியிருப்பதால், இன்று இரவும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மோப்ப நாய்களின் உதவியோடும், மேலும் ஆய்வுகளின் மூலமும் பெறப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாக வைத்தே இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், நோர்வே இராணுவத்தின் பொறியியல் பிரிவும் தேடுதல் நடவடிக்கைகளில் உதவுவதற்காக களத்தில் இறக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள், காணாமல் போனவர்களுக்காகவும், உயிரிழந்தவர்களுக்காகவும் அங்கங்கே மெழுகுவர்த்திகளை ஏற்றி தமது ஆற்றுப்படுத்தலை வெளிப்படுத்தி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் 6 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனர்த்தப்பகுதியை விளக்கும் காணொளி:
https://www.vgtv.no/video/210645/enkelt-forklart-dette-er-skredomraadet
(நன்றி: www.vgtv.no)