நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்!

You are currently viewing நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்!

நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது கூற்றுக்களின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் நீதிபதி ஒருவர் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு பதவிநிலைகளை தூக்கியெறிந்து நாட்டை விட்டு வெளியேறியிருப்பதையிட்டு அரசாங்கம் வெட்கித் தலை குனிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிரச்சுறுத்தல், அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சம்பந்தமாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவருடைய கருத்தின் பிரகாரம், நீதிபதி வாகனத்தை விற்பனை செய்தமை, தூதுவர்களைச் சந்தித்தமை போன்ற செயற்பாடுகள் ஊடாக நீதிபதி திட்டமிட்ட வகையில் தான் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக காண்பிப்பதற்கு முயல்கின்றார்.

அத்துடன், நீதிபதிக்கு அச்சுறுத்தல் காணப்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடுகளை செய்யவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதிகாரங்கள் இருப்பதாகவும் கூட நீதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

அவ்வாறான நிலையில், நீதிபதி சரவணராஜா கொழும்புக்கு வருகை தந்தமை, அவர் வாகனத்தை விற்பனை செய்தமை, தூதுவர்களை சந்தித்தமை உள்ளிட்ட விடயங்கள் சாதாரணமானவை.

நாட்டில் வாழ முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றபோது, பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை எடுக்கின்ற ஒரு சதாரண நபர் கூட இவ்விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வார்.

இந்நிலையில், நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சரவணராஜா நிச்சயமாக அமைதியான முயையில் தனது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தி அச்செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால், நீதியமைச்சரின் கூற்றானது மற்றொரு விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதே அந்த விடயமாகும்.

குருந்தூர்மலை விவகாரத்தில் முக்கியமான தீர்மானங்களை அறிவித்த அவரை, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றுக்குள்ளும், வெளியிலும் அச்சுறுத்தினார்கள். அதனோடு, அவர் புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டும் வந்தார். அதற்கான தகவல்களும் உள்ளன.

இவ்வாறான நிலையில் நீதியமைச்சரின் கூற்று அந்த விடயங்களுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக காணப்படுகின்றது. இவ்விதமான நிலைமையில் உள்ள ஒரு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதும், அதியுச்சமான அழுத்தம் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதவொரு விடயமாகும்.

அதுமட்டுமன்றி, புலனாய்வாளர்களே அவரைப் பின்தொடர்கின்றபோது, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதானது, திருடனின் தயாரிடம் திருடன் குறித்து வெற்றிலைச் சாத்திரம் கேட்பதற்க ஒப்பானதாகும்.

ஆகவே, இலங்கை நீதித்துறையின் நீதிபதி ஒருவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியமைக்காக அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மேலும், உள்நாட்டு பொறிமுறைகளால் எவ்விதமான நியாயங்களும் கிடைக்காது என்பதும் உறுதியாகிவிட்ட நிலையில் சர்வதேச ரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையின் நியாயம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments