குருந்தூர் மலை பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளயும் மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நாட்டிலே பிக்குகள் பொலிஸாரை வைத்துக்கொண்டு புத்தர் சிலையை நிறுவ முடியுமா? அப்படியானால் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? அத்துடன் குருந்தூர் மலையில் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவி்த்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை என்னும் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆதிசிவனை வழிபட்ட தமிழ் மக்களின் வாழ்விடத்தில், வணக்க இடத்தில் சில பிக்குகள், ஏதுமறியாத அப்பாவி சிங்கள மக்களை அழைத்து வந்து நூற்றுக்கணக்கான இராணுவம் ,பொலிஸார் ,கடற்படையின் பாதுகாப்போடு புத்தபகவானின் சிலையை வைப்பதற்காக முற்பட்டார்கள். கருணை, காருண்ணியம் ,அன்பு,சகோதரத்துவம் பற்றி கற்பித்த புத்த பகவானை ஒரு யுத்த வடிவமாக,ஆக்கிரமிப்பின் வடிவமாக சிலை நிறுவ முற்பட்டபோது முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்,ஏனைய மாவட்டங்களிலிருந்து சென்ற தமிழர்கள் அங்கே ஒரு போராட்டத்தை நடத்தி அதனை தடுத்துள்ளார்கள்.
குருந்தூர் மலை பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளயும் மேற்கொள்ளக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றத்தின் தடை உத்தரவுள்ளது. இங்கே இரு மதம் சார்ந்தவர்களும் கட்டுமானப்பணிகள் எதனையும் செய்யக்கூடாது என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறான நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நாட்டிலே பிக்குகள், பொலிஸாரையும் வைத்துக் கொண்டு புத்தபகவானின் சிலையை நிறுவ முடியுமா? அப்படியானால் நீதிமன்றம் யாருடைய பக்கம் உள்ளது? நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது?
உங்களின் ஆட்சியில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் செல்லாதிருக்கலாம். அரசை விமரிசித்தவர் சிறையில் இருக்கிறார். 5 ஆண்டுகள் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் அமைச்சராக இருக்கிறார். இவ்வாறான சூழலில்தான் அங்கு புத்தர் சிலையும் வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் நீதிமன்றங்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லையா? நீதிமன்ற கட்டளைகளை நிறைவேற்றாத அராஜக நாடாக இது தெரியவில்லையா? நீதிமன்ற கட்டளைகளை பிக்குமார் மீற முடியுமா? என கேட்கின்றோம்.
தமிழர்களின் தொல்லியல் இடமான நீராவியடிப்பிள்ளையார் கோவிலடியில் வலுக்கட்டாயமாக புத்தர் சிலையை வைத்தார்கள். அந்த இடத்துக்கு வந்த பிக்கு புற்றுநோயால் இறந்தபோது அவரின் உடலை அந்த இடத்தில் எரித்தார்கள். அதுவும் நீதிமன்ற கட்டளையை மீறித்தான் எரித்தார்கள். இவ்வாறு நீதிமன்ற கட்டளைகளை மீறும் பிக்குமாருக்கு நீதிமன்றங்கள் என்ன தண்டனை வழங்குகின்றன ? இது வெட்கப்பட வேண்டிய விடயம் இல்லையா?நீதியை மதிக்காத நாட்டில் எப்படி உங்களால் சகோதரத்துவத்தை உருவாக்க முடியும்?ஒவ்வொரு சிங்களவரும் உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.
மிருசுவில் படுகொலையாளியான இராணுவ வீரரை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் பொதுமன்னிப்பில் விடுவிக்கின்றார். நீதிமன்றத்தை அவமதித்த ஞான சார தேரரை அப்போதைய ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் விடுவித்தார் . ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் எத்தனை வருடங்களாக சிறைகளில் வாடுகின்றனர். ஒரு இனம் இங்கு திட்டமிட்டு இன,மத ரீதியாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
நீங்கள் குருந்தூர் மலையில் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது. ஒருவர் செய்யும் பாவங்களுக்கு அவர் நரகத்துக்கு சென்றால் என்ன தண்டனை என பௌத்தம் சொல்கின்றது. இது தெரிந்துமா சிங்கள தலைவர்கள், பிக்குமார்கள் இந்த அநியாயங்களை செய்கின்றார்கள்? எனவே இந்த கர்ம வினைகளிலிருந்து நாடு தப்ப வேண்டுமானால் நீதிமன்றங்களின் கட்டளைகளை நிறைவேற்ற இந்த பாராளுமன்றம் கட்டளையிட வேண்டும் என்றார்.