நீதி வேண்டிய பயணத்தில் கைகோர்த்த ஒஸ்லோ வாழ் தமிழர்கள்!

You are currently viewing நீதி வேண்டிய பயணத்தில் கைகோர்த்த ஒஸ்லோ வாழ் தமிழர்கள்!

தமக்கான பாதுகாப்பையும், முறையான வதிவிட அனுமதியையும் வேண்டி, கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக நோர்வேயில் நீதிப்போராட்டம் நடத்திவரும் “கொலின்” குடும்பத்தினரின் மனுநீதிக்கான போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து, நோர்வே நாடாளுமன்ற முன்றலில் இன்று (03.10.2021) நடைபெற்ற ஆதரவுக்கரம் கோர்க்கும் ஒன்றுகூடலில் தமிழ்மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கொட்டும் மழையிலும், சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது, “கொலின்” குடும்பத்தினரின் மனுநீதிக்கான போராட்டத்தில் தமிழ்மக்கள் திரண்டிருந்த இவ்வாதரவுக்கரம் கோர்க்கும் ஒன்றுகூடலை “நோர்வே தமிழ்ச்சங்கம்” ஒழுங்கமைத்திருந்தது. ஒஸ்லோவிலுள்ள அனைத்து தமிழ் அமைப்புக்களின் சார்பிலும், தன்னார்வ முறையிலும் பலர் கலந்துகொண்டிருந்த நிலையில், நோர்வே அரசியல் கட்சிகள் சிலவற்றின் சார்பில் அவற்றின் பிரதிநிதிகளும், நோர்வீஜிய தன்னார்வலர்களும் கலந்துகொண்டு “கொலின்” குடும்பத்தினருக்காக ஆதரவுக்குரல் கொடுத்திருந்தனர்.

நீதி வேண்டிய பயணத்தில் கைகோர்த்த ஒஸ்லோ வாழ் தமிழர்கள்! 1
நோர்வே நாடாளுமன்ற முன்றலில் கூடிய தமிழர்கள்!

2009 தமிழின இனவழிப்புக்குப்பின்னரான காலப்பகுதியில், இனவழிப்பிலிருந்து உயிர்தப்பிப்பிழைத்த “கொலின்” குடும்பத்தினர், பலத்த சிரமங்களின் பின் நோர்வே வந்தடைந்து நோர்வேயில் புகலிடக்கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இக்குடும்பத்தினரின் புகலிடக்கோரிக்கை முதற்கட்டமாக நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அக்குடும்பத்தினர், திரும்பவும் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள், வட நோர்வேயின் கிராமங்களிலொன்றான “Finsness” என்னுமிடத்திலுள்ள தேவாலயமொன்றில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையிலும், தமது கோரிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு மீண்டும் மீண்டும் நோர்வே அரசுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நிராகரிக்கப்பட்ட நிலையில், தேவாலயத்தின் சுவர்களுக்கு மத்தியிலேயே தமது வாழ்வை கழிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இக்குடும்பம் இருந்துவரும் வேளையில், அப்பகுதியிலிருக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இக்குடும்பத்தினரின் நாளாந்த தேவைகளை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக கவனித்து வருகிறார்கள்.

நீதி வேண்டிய பயணத்தில் கைகோர்த்த ஒஸ்லோ வாழ் தமிழர்கள்! 2
7 வருடங்களாக தேவாலயத்தில் தஞ்சமடைந்திருக்கும் “கொலின்” குடும்பத்துக்கு நீதி வேண்டும்! (மக்கள் ஏந்தியிருந்த பதாகைகளில் ஒன்று)

இக்குடும்பத்தினருக்கு இலங்கையில் பாதுகாப்பு நிச்சயமாக இருக்காதென தகுதிவாய்ந்த பலர் நோர்வே அரசுக்கு சாட்சியமளித்த நிலையில், ஐக்கியநாடுகள் சபையின் கிளை நிறுவனங்களில் பணியாற்றும் மனிதாபிமான தொண்டர்களும் இதை உறுதி செய்திருந்த நிலையிலும், இக்குடும்பத்தின் விண்ணப்பத்தை நோர்வே அரசு தொடர்ந்து நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இக்குடும்பத்தினரின் வாழ்விடக்கோரிக்கைக்கான மனுநீதி போராட்டத்துக்கு ஆதரவு சேர்க்கும் விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இன்றைய ஆதரவுக்கரம் கோர்க்கும் ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் சார்பில், “கொலின்” குடும்பத்தினரின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, நோர்வேயில் பாதுகாப்பாக வாழும் உரிமை அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நோர்வே அரசுக்கு முன்வைக்கப்பட்டது.

காணொளி இணைப்பு:

https://youtu.be/fFRbR4AOHHw

பகிர்ந்துகொள்ள

Leave a Reply