கொரோனா ஊரடங்கால் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தண்ணீர், உணவு, இருப்பிடமின்றி சாலைகள், தொடர்வண்டி நிலையங்கள், மாநில எல்லைகளில் தவித்துக் கொண்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் தாய் இறந்தது தெரியாமல் ஒரு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
சிறப்பு தொடர்வண்டி கள் இயக்கப்படும் போதிலும், பல தொடர்வண்டிகள் வழித்தடம் மாற்றி இயக்கப்படுவதால் வழக்கமான நேரத்தை விட, கூடுதல் நேரம் பயணத்திற்கு செலவாகிறது. உணவு, தண்ணீர் கிடைப்பதில் தொழிலாளர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
தொடர்வண்டி நிலையத்தில் இருக்கும் தண்ணீர், உணவு பொட்டலத்திற்காக தொழிலாளர்கள் சண்டையிட்டுக்கொள்ளும் வேதனை தரும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்துள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலம் முஷாபர்பூர் தொடர்வண்டி நிலையத்தில் 4 நாட்களுக்கு மேலாக உடல் நலம் குன்றிய தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய் இறந்ததும்கூட தெரியாமல் தூக்கத்தில் இருப்பதாக நினைத்து போர்வையை பிடித்து ஒரு வயது குழந்தை அங்கும், இங்குமாக விளையாடிக் கொண்டிருந்தது.