நேட்டோவின் பொதுச்செயலாளர் தமது முதல் எதிரி என, ரஷ்ய இணைய ஊடறுப்புக்குழுவான “Killnet” பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளதோடு, நேட்டோ பொதுச்செயலாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பயமுறுத்தல்களையும் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயின் முக்கியமான இணையவலை தொடர்பாடல்களை கடந்த புதன்கிழமை, 29.06.22 அன்று ஊடறுத்திருந்த மேற்படி ஊடறுப்புக்குழு நோர்வேயின் பிரதான இணையவலை தொடர்புகளை செயலிழக்க வைத்ததோடு மேற்படி அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளது.
குறிப்பாக நோர்வேயின் பிரபலமான இணையவங்கி பரியவர்த்தனைகளின் தொடர்பாடல்கள் மேற்படி குழுவின் ஊடறுப்பினால் பாதிக்கப்பட்டதோடு, ஊடகங்கள், மற்றும் பிரதானமான இணையவலை தொடர்பாடல்களும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தாக்குதல்கள் நடத்தப்பட்ட சிலமணி நேரங்களிலேயே அனைத்தும் மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டுவரப்பட்டாலும், மேற்படி ஊடறுப்புக்குழுவின் தாக்குதல்கள் தொடரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக நோர்வேயின் இணைய மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பேசவல்ல அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, நோர்வேயின் நாடாளுமன்ற இணையவலை ஊடறுப்புத்தாக்குதலுக்கு உள்ளாக்கியபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் இருந்த விபரங்கள் திருடப்பட்டதோடு, நோர்வேயின் காவல்துறையின் பாதுகாப்புப்பிரிவின் இணையவலையும் ஊடறுக்கப்பட்டதோடு, இதுபோல் அமெரிக்காவிலும் இணைய ஊடறுப்புக்கள் நடத்தப்பட்டதோடு, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான “பென்டகன்” அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமையும் நினைவுகூரத்தக்கது.
குறிப்பாக, உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படும் நாடுகளை குறிவைத்து ஊடறுப்புக்களை இக்குழு மேற்கொண்டு வருவதாக குறிப்பிடும் நோர்வே, ரஷ்ய தாக்குதல்களை சமாளிக்கும் விதத்தில் “ஆட்லறி ஏவுகணை” தொகுதிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக நோர்வே அறிவித்தவுடன் மேற்படி ஊடறுப்பு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.
“Killnet” என தம்மை அழைத்துக்கொள்ளும் மேற்படி ஊடறுப்புக்குழு, ரஷ்ய அரச ஆதரவோடு இயங்குவதாக முன்னதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தாலும், அதற்கான உறுதியான ஆதாரங்களேதும் இதுவரை கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்ற நிலையில், மேற்படி குழுவினருக்கும் தமக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையென ரஷ்யா அறிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைமீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில், ரஷ்ய இராணுவ உபகரணங்களை செயலிழக்க வைப்பதிலும், ரஷ்யாவின் முக்கியமான இணையவலை தொடர்பாடல்களை செயலிழக்க வைப்பதிலும் மும்முரமாக ஈடுபட்ட உக்ரைன் இணைய ஊடறுப்புக்குழுக்களுக்கு நோர்வே ஆதரவாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.