நோர்வேயின் மலைக்குகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க போர் மற்றும் மருத்துவ சாதனங்கள்!

You are currently viewing நோர்வேயின் மலைக்குகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க போர் மற்றும் மருத்துவ சாதனங்கள்!

நோர்வேயின் வடக்குப்பகுதியிலுள்ள பிரமாண்டமான மலைக்குகைகளுக்குள், அமெரிக்காவுக்கு சொந்தமான ஏராளமான இராணுவத்தளபாடங்களும், போர்க்களத்தில் பாவிக்கக்கூடியளவு மருத்துவ உபகரணங்களும் மறைத்து வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

7 சர்வதேச உதைபந்தாட்ட மைதானங்களுக்கு சமானமான இந்த இரகசிய மலைக்குகைகளுக்குள் ஒரே நேரத்தில் 1000 படுக்கைகளை வைத்து போர்க்கள மருத்துவ சிகிச்சைகளை வழங்கக்கூடிய விதத்தில், தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வே, அமெரிக்கா மற்றும் நேசநாடுகளின் கூட்டமைப்பின் (NATO) பொருளாதார பங்களிப்போடு, நோர்வேயின் வடக்கு பகுதியிலுள்ள பிரமாண்டமான மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட மலைக்குகைகளில், உடனடியாக பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்ட அவசர வைத்தியக்குடில்கள், படுக்கைகள், வெதுப்பகம் (Bakery), சலவையகம் (Laundry), மின்வழங்கல் மையம் (Power Station), நீர்வழங்கல் மையம் (Water Supply), தீயணைப்பு நிலையம் (Fire Station), ஊடுகதிர் (X – Ray) பரிசோதனை நிலையம், அறுவை சிகிச்சை (Operation) நிலையம் போன்றவையோடு, அத்தியாவசிய மருந்துவகைகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பல நூற்றுக்கணக்கான அமெரிக்க வாகனங்கள், அவசர உயிர்காப்பு வாகனங்கள் (Ambulance), பாரிய தீயணைப்பு வாகனங்கள், பேரூந்துகள், பாரவூர்திகள், நில அகழ்வு இயந்திரங்கள் போன்ற புத்தம்புதிய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளையில், இப்பிரமாண்டமான மலைக்குகைகளில், போருக்கான ஒத்திகைகளில் இராணுவ வாகனங்கள் ஈடுபடும் வகையில் பல சுரங்கவழிகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயின் மலைக்குகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க போர் மற்றும் மருத்துவ சாதனங்கள்! 1

சோவியத் ஒன்றியம் அரசோச்சிய காலத்திலிருந்தே ரஷ்யாவிலிருந்து பாரிய படையெடுப்பொன்றை எந்நேரமும் எதிர்நோக்கிவரும் நோர்வேயின் பாதுகாப்பு கருதியே மேற்படி மலைக்குகைகள் அமைக்கப்பட்டு இராணுவத்தளபாடங்களும், வைத்திய உபகரணங்களும் அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவிலிருந்து படையெடுப்பொன்றை நோர்வே எதிர்கொள்ளுமானால், நேசநாட்டுப்படைகள் காளத்திலிறங்குவதோடு, ரஷ்யாவுக்கெதிரான போரில் இலகுவாக இராணுவத்தளபாடங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே இப்பிரமாண்டமான மலைக்குகைகள் அமைக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுவதுண்டு.

சுமார் 290 மில்லியன் நோர்வே குறோணர்கள் செலவில் 1991 ஆம் ஆண்டு அமைத்து முடிக்கப்பட்ட இந்த பிரமாண்டமான மலைக்குகைகளுக்கான செலவை நோர்வே, அமெரிக்கா மற்றும் நேசநாட்டு படைகளின் கூட்டமைப்பு ஆகியன பகிர்ந்து கொண்டாலும், அவசர காலத்தில் தேவையேற்படின் இந்த மலைக்குகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அவசர வைத்திய உபகரணங்களை நோர்வே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற ஒப்பந்தம் முன்கூட்டியே செய்துகொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மலைக்குகைகளை பாதுகாத்து மேம்படுத்தி வைத்திருக்கும் பொறுப்பை நோர்வே பாதுகாப்புத்துறை தனது பொறுப்பிலே வைத்திருப்பதாக தெரிவிக்கும் நோர்வேயின் பாதுகாப்புத்துறை, இதுபோன்ற பல்வேறு பிரமாண்டமான மலைக்குகைகள், நோர்வேயின் வடக்கு பகுதியிலும், மத்திய பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவை எங்கெங்கே அமைந்துள்ளன என்பதும், அவற்றுள் என்னென்னெ வைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் அதியுச்ச இராணுவ இரகசியங்களெனவும் தெரிவிக்கிறது.

நோர்வேயின் மலைக்குகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க போர் மற்றும் மருத்துவ சாதனங்கள்! 2

நோர்வேயில் “கொரோனா” பரவலினால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகளின் காரணமாகவும், மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாகவும், மேற்படி மலைக்குகைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மருத்துவ உபகரணங்கள் பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு, அவை பொதுமக்களுக்கானதல்ல என பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தாலும், “கொரோனா” வுக்கெதிரான போரில் நோர்வே பாதுகாப்புத்துறையின் உதவி நாடப்படும் பட்சத்தில், பாதுகாப்புத்துறையின் வசமிருக்கும் இவ்வாறான, மலைக்குகைகளில் சேமிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் தேவையேற்படின் ஆலோசிக்கப்படுமென, நோர்வேயின் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள