சிங்கள காடையர்கள் மேற்கொண்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் ஏனைய உடமைகளும் சூறையாடப்பட்டன.
பல தமிழ்பெண்களின் கற்பு பறிக்கப்பட்டதுடன், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை வேறுபாடு இன்றி பலர் வீதிகளில் பெற்றோல் ஊத்தி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறாக தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும், கொடூரமான முறையில் வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்ட போதும் அப்போது ஆட்சியில் இருந்து ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கம் சுமார் ஒருவார காலம் நடைபெற்ற இந்த வன்முறைகளை கண்டு கொள்ளாது வேடிக்கை பார்த்ததுக் கொண்டிருந்தது.
அந்த அரசாங்கத்தின் அன்றைய அந்த நிலை அரசாங்க ஆதரவுடனனேயே இந்த படுகொலைகள் நடந்தேறியதை வெளிச்சம் போட்டுக் காட்டின.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட 53 பேர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறையில் இருந்தவர்கள் கூட கொலை செய்யப்பட்டமையானது இந்த நாட்டின் நீதித்துறை மீதும் கேள்வியை எழுப்பியிருந்தது. ஆகவே இவை அனைத்தும் ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது நிரூபணமாகிறது.
இந்த இனவழிப்பை உலகெங்கும் வாழும் மக்கள் தொடர்ச்சியாக சர்வதேசத்திற்கு எடுத்துரைத்து வருகின்றார்கள்
அந்த வகையில் இன்றைய நாள் நோர்வேயின் தலைநகர் ஒசுலோவில் துண்டுப்பிரசுரங்கள் பதாகைகள் மூலம் மீண்டும் பல்லின மக்களுக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது.