“Holmenkollen skifestival” எனப்படும் நோர்வேயின் புகழ்பெற்ற பனிச்சறுக்கல் விளையாட்டுவிழா நிறுத்தப்படலாமென தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. கொரோனா வைரஸின் பரவல், தலைநகர் ஒஸ்லோவில் அவதானிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படலாமென எதிர்வுகள் கூறப்படுகின்றன.
நோர்வேயில் மக்கள் சுகாதாரத்துறை இயக்குனரின் தகவல்களின்படி, நிலைமைகள் கூர்ந்து அவதானிக்கப்பட்டு வருவதாகவும், அவசியம் ஏற்படின் விளையாட்டுவிழா நிறுத்தப்படும் எனவும் தெரிகிறது.
விளையாட்டுவிழா அமைப்பாளர்களின் தகவல்களின்படி, மக்கள் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்கள் பின்பற்றபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளபோதும், கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படுவோர், இவ்வாறான மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் தனிமையில் இருக்கவேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
வருடாந்தம் குளிர்காலத்தில் மேற்படி பனிச்சறுக்கல் விளையாட்டுவிழா நடைபெறுவதும், பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவதும் குறிப்பிடத்தக்கது.
மேம்பாடு:
05.03.2020, வியாழக்கிழமையன்று வெளிவந்த இறுதி தகவல்களின்படி, மேற்படி விளையாட்டு விழா நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.