நோர்வேயின் பிரதமர் இன்று அறிவித்த உத்தேச தற்காலிக அவசர சட்டமூலத்திற்கு, நோர்வேயின்பிரபல சட்டத்துறை பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இச்சட்டமூலமானது சனநாயகவிதிகளுக்கு முரணானதென அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சட்டத்துறை விரிவுரையாளர்களாக பணிபுரியும் “ Terje Einarsen” மற்றும் “Morten Walløe Tvedt” ஆகிய சட்டத்துறை விற்பன்னர்கள், அரசின் இத்திட்டத்திற்கு தமது கடும்எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள அவசர நிலையில் தேவைக்கேற்ப முடிவுகளை இலகுவாக எடுத்துக்கொள்வதோடு, விரைந்த நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இலகுவாக்குவதற்காகவுமே மேற்படி உத்தேசசட்டமூலத்தை அமுல்படுத்தவிருப்பதாக இன்றைய தினம் பிரதமர் “Erna Solberg” அம்மையார்தெரிவித்திருந்த நிலையில், குறித்த அவசர சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அனுமதியளித்தால், அளவுக்கதிகமான பரந்துபட்ட அதிகாரங்களை அரசு தன்னிச்சையாகவே கையகப்படுத்துவதோடு, தொழின்முறை சட்டவிதிகள், சமூகநல கொடுப்பனவு சட்டவிதிகள், ஐரோப்பிய ஒன்றியத்துடனானவர்த்தக விதிகள் உட்பட, நோர்வேயின் சட்டத்தையும் புறந்தள்ளி வைப்பதற்கான அதிகாரம்அரசுக்கு வழங்கப்படும் அபாயம் இருப்பதாக மேற்படி சட்டவல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இச்சட்டமூலத்தின் பிரகாரம், நாடாளுமன்றத்தை கூட்டாமலேயே முடிவுகளை எடுத்துசெயற்படுத்தும் அதிகாரங்கள் அரசின் கைகளுக்கு வரும் என எச்சரித்திருக்கும் இவ்விரு சட்டவல்லுனர்களும், பொதுவெளியில் விவாதிக்கப்படாமலே இச்சட்டமூலம் அமுலுக்கு வருமானால்அது ஒரு சனநாயக விரோதச்செயலாகவே இருக்குமெனவும் கருத்துரைத்துள்ளனர்.