நோர்வேயின் தலைநகர் “ஒஸ்லோ” வின் பொதுப்போக்குவரத்துக்களை நிறுத்தி வைக்கும்படி வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ள. எனினும், அதற்கான அவசியமேதும் இல்லையென நோர்வேயின் சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஒஸ்லோவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் பரம்பலை கட்டுட்டுப்படுத்தும் முயற்சியாக, அதிகளவில் மக்கள் மிக நெருக்கமாக பயணம் செய்யும் பொதுப்போக்குவரத்துக்களை நிறுத்தி வைப்பதற்கான வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், “மெட்ரோ” நிலக்கீழ் தொடரூந்துகள், மின்சார இழுவை வண்டிகள் மற்றும் பேருந்துகளை நிறுத்தி வைத்தால், பொதுமக்களின் அன்றாட போக்குவரத்துக்கள் பெருமளவில் பாதிப்புக்களுக்கு உள்ளாகுமெனவும் சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 5 இலட்சம் பயணிகளை காவிச்செல்லும் “மெட்ரோ” நிலக்கீழ் தொடரூந்துசேவை நிறுத்தப்பட்டால், ஒஸ்லோ நகரமே செயலிழந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, டென்மார்க்கில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுவதாக டென்மார்க் அறிவித்துள்ள நிலையில், அதன் அயல் நாடான நோர்வேயிலும் பாடசாலைகளை மூட வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துவருவதோடு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு தயங்குவதாக, சமூகவலைத்தளங்களூடாக செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையிலேயே, ஒஸ்லோவில் பொதுப்போக்குவரத்துக்களை நிறுத்த வேண்டுமென கோரிக்கைகள் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.