நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னான தொடர் நிகழ்வுகள் சோகமானவையாக அமைந்துள்ளன.
பலர் வீடுகளை இழந்துள்ளநிலையில், காணாமல் போனதாக கருதப்படும் 10 பேர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. காணாமல் போனவர்கள் எனக்கருதப்படுபவர்கள், நத்தார் விடுமுறைக்காலத்தையொட்டி தங்களது மலைவாசத்தலங்களுக்கு போயிருக்கலாமென முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அனைவருடைய தொலைத்தொடர்பு விபரங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காவல்துறை இன்னமும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கி, புதைகுழியில் அகப்பட்டிருக்கலாமெனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அனர்த்தம் ஏற்பட்ட பகுதியிலிருந்த வீடுகளில் சில, நிலச்சரிவினால் இருந்த இடத்தை விட்டு சுமார் 400 மீட்டர் தூரம்வரை விலகிச்சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அனர்த்தம் நிகழ்ந்த பகுதியில் புவியதிர்வுகள் ஏற்பட்டனவா என்பதை அறிவதற்கான முயற்சிகளை எடுத்திருப்பதாக நோர்வேயின் புவியதிர்வுகளை பதிவு செய்யும் நிலையம் அறிவித்துள்ளது. நாளாந்தம் ஏற்படக்கூடிய, மனிதரால் உணர்ந்துகொள்ள முடியாத சிறிய புவியதிர்வுகளையும் பதிவு செய்துகொள்ளும் இந்நிலையம், அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் புவியதிர்வு ஏற்பட்டதற்கான தடயங்கள் இல்லையென்றாலும், சிறியளவிலான புவியதிர்வுகளும் சதுப்பு மற்றும் களிமண் பிரதேசங்களில் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதால், தங்களிடமுள்ள தரவுகளை மீண்டும் கவனமாக சரிபார்த்து வருவதாக தெரிவித்துள்ளது.
இறுதித்தகவல்களின்படி, நேற்று இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் யாரையும் கண்டறிய முடியவில்லையென்றும், இன்று மதியப்பொழுதில் மோப்ப நாய்கள் இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டிருப்பதாகவும், பாதாளத்துக்கு கீழிறங்கியுள்ள நிலப்பரப்புக்குள் 3 உயிர்காப்பு வீரர்கள் உலங்குவானூர்தி மூலமாக இறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
குறித்த அனர்த்தம் நிகழ்ந்த பகுதி நிலச்சரிவொன்றை சந்திக்கும் அபாயம் உள்ளதாக சுமார் 40 வருப்பிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை செய்யப்பட்டதோடு 2004 ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தாலும், அவ்விடத்தில் தொடர்ந்து குடிமனைகள் அமைக்கப்பட்டிருப்பது இப்போது பேசு பொருளாகியிருக்கிறது.
நோர்வே மலைநாடாக இருப்பதால், மலைச்சரிவுகள், பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள் போன்றவற்றுக்கு அடிக்கடி முகம் கொடுத்து வந்தாலும், இவ்வாறான ஆபத்துக்கள் உள்ளதாக கருதப்படும் இடங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுவதோடு, இவ்வாறான இடங்கள் முறையான கண்காணிப்புக்களுக்கு உட்படுத்தப்படுவதோடு, சமகால இடைவெளிகளில் ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருவது வழமை.
குறிப்பாக, தலைநகர் ஒஸ்லோவின் மையப்பகுதி கடலை நிரவி, சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சதுப்பு நிலப்பகுதியிலேயே ஒஸ்லோ நகரத்தின் பிரதான தொடரூந்து நிலையம், பால்பொருள் அங்காடிகள், கட்டடத்தொகுதிகள், நிலக்கீழ் தொடரூந்து பாதைகள், அவற்றுக்கான நிலையங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயின் பல பாகங்களில், கடலை நிரவி கட்டடங்களை அமைத்தல், சதுப்பு நிலங்களின்மேல் உறுதியான மேற்பரப்புக்களை அமைத்து அவற்றின்மேல் கட்டடங்களை அமைத்தல், மலைச்சரிவுகளில் கட்டடங்களை அமைத்தல் போன்றவை, முறையான அனுமதிகளோடு விதிகளுக்கமைய அமைக்கப்படுகின்றன. எனினும், அவ்வப்போது துரதிர்ஷ்டவசமாக இவ்வாறான அனர்த்தங்கள் நிகழ்வதுண்டு.
நோர்வேயில் எந்தெந்த இடங்களில் சதுப்பு நிலங்களின் மேல் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன போன்ற விபரங்கள் அரச நிறுவனமொன்றின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாடெங்கிலும் உள்ள பொதுமக்கள், தங்கள் தங்கள் இடங்களைப்பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு: