படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் அமெரிக்க பிரதிநிதிகள் சபை தீா்மானத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம்!

You are currently viewing படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் அமெரிக்க பிரதிநிதிகள் சபை தீா்மானத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம்!

இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூலுக்காக சர்வதேச பொறிமுறை நிறுவப்பட வேண்டும். அத்துடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீா்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீா்மானத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பில் ஜோன்சன், டேனி கே. டேவிஸ், பிரெட் ஷெர்மன் மற்றும் திருமதி. கேத்தி மெனிங் ஆகிய நான்கு பிரதிநிதிகளுடன் இணைந்து பிரதிநிதி திருமதி. டெபோரா கே. ரோஸ் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2021 மே 18ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இல. H.RES.413 தீர்மானம் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் 2021 மே 18ஆந் திகதி வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான சபைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீர்மானத்தின் நோக்கத்தில் கடுமையான சந்தேகங்களை எழுப்பும் வகையில், ஆதாரமற்ற, நிறுவப்படாத மற்றும் அப்பட்டமான பொய்களைக் கொண்ட குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ள இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்ப்புக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான மற்றும் ஒருதலைப்பட்சமான தன்மையைக் கருத்தில் கொண்டு, இது வெறுமனே மனித உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல, மாறாக அமெரிக்கா உட்பட 32 நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்கக் காங்கிரசில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்டவர்களால் தாக்கம் செலுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகத் தென்படுகின்றது என்பதைக் குறிப்பிடலாம்.

இலங்கை அரசாங்கம் தனது பிரதிபலிப்பை வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக வெளிநாட்டு விவகாரங்கள் சபை, ஆசியா தொடர்பான துணைக்குழு சபை மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூலுக்காக சர்வதேச பொறிமுறை நிறுவப்பட வேண்டும். அத்துடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீா்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த மே 18ஆம் திகதி தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 வது ஆண்டு நிறைவை ஒட்டி அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டெபோரா ரோஸ் இந்தத் தீர்மானத்தை சபையில் முன்வைத்தார்.

இலங்கை இராணும் முள்ளவாய்க்காலில் பாரிய தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று 12 ஆண்டகள் கடந்துவிட்டன.

இவ்வாறான படுகொலைகள் இடம்பெற்று ஒரு தசாப்தம் கடந்துவிட்டபோதும் குற்றவாளிகளைப் பொறுப்புக் கூறச் செய்ய இலங்கை அரசு தவறிவிட்டது. அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளையும் இலங்கை நிறைவேற்றவில்லை என அந்தத் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பரிகாரம் செய்யவோ, அவை குறித்து விசாரிக்கவோ, வழக்குத் தொடரவோ தவறி வருவதன் மூலம் இலங்கையில் தண்டனை விலக்குக் காலாச்சாரம் நிலவுகிறது எனவும் அந்தத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டது. உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அது செயற்படுத்தப்படவில்லை. இலங்கையின் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். பெருமளவானோர் காணாமல் போகச்செய்யப்பட்டனர். போரின்போது துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நிாப்பந்திக்கப்பட்டனர் என்பதையும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பாரம்பரிய தமிழர் தாயக பகுதிகளில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படைச் சிப்பாய் என களமிறக்கப்பட்டு அப்பகுதி இராணுவமயமாக்கப்பட்டுள்ளது எனவும் தீா்மானம் குறிப்பிடுகிறது.

மேலும், நிரந்தர அரசியல் தீர்வுக்காக வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் கருத்தறிய ஐ.நா. பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்து வடக்கு மாகாண சபை தீா்மானம் நிறைவேற்றியைதையும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply