மன்னார் – உயிலங்குளம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பட்டா ரக வாகனத்தினால் மோதுண்டு இறந்தவர் திட்டமிட்ட கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவரும், உயிலங்குளம் கால்நடை வைத்திய அலுவலகத்தில் கடமையாற்றும் செபமாலை சிறிதரன் (வயது 55) என தெரிய வந்துள்ளது.
மன்னார் உயிலங்குளத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் நொச்சிக்குளம் கிராமத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற தர்க்கம் வன்முறையாக மாறியது. குறித்த சம்பவத்தை தொடர்ந்து உயிலங்குளம் மற்றும் நொச்சிக்குளத்தை சேர்ந்தவர்களுக்கிடையில் தொடர்ச்சியாக பகைமை நிலை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது விபத்தில் உயிரிழந்த நபர் உயிலங்குளம் மற்றும் நொச்சிக்குளத்தை சேர்ந்தவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது, கழுத்தை வெட்டி கொலை செய்ய முயன்ற நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
குறித்த நபர் மீது மன்னார் பொது வைத்தியசாலையில் கொலை முயற்சி இடம் பெற்றுள்ளதுடன் கடந்த வாரம் குறித்த நபரின் சகோதரர் மீது மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் கத்தி குத்து தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனத்தை ஓடி வந்ததாக கூறப்படும் இருவர் சரணடைந்த நிலையில் தற்போது உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..
கடந்த வருடம் நொச்சிக்குளம் கிராமத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரின் உறவுகள் சிலர் நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்களை பழி வாங்கும் நோக்குடன் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றமை தெரிய வருகிறது.
குறித்த சம்பவத்தை திட்டம் தீட்டிய சிலர் மன்னாரில் இருந்து கொண்டு மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர். உயிலங்குளம் பொலிஸாரிடம் உள்ள சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு விடயங்களை சிறீலங்கா காவற்துறையினருக்கு வாக்கு மூலம் ஊடாக தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.