பதவிக்காக ”நீட்” தேர்வை ஆதரிக்கும் பாலகுருசாமிக்கு கடும் கண்டனம்.

You are currently viewing பதவிக்காக ”நீட்” தேர்வை ஆதரிக்கும் பாலகுருசாமிக்கு கடும் கண்டனம்.

அரியலூர் அனிதா தொடங்கி, செல்வன் விக்னேஷ் வரை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட எங்கள் வீட்டுத் தமிழ்ப் பிள்ளைகள் ‘நீட்’ தேர்வினை எதிர்த்து தங்கள் உயிர்களைப் பலியிட்டுக் கொண்டனர். எங்களுக்கு தொடர்பே இல்லாத ஒரு நயவஞ்சகக் கூட்டம், எங்கள் பிள்ளைகளின் விலை மதிக்க முடியாத உயிரிழப்புகளை,
காதல் தோல்வியில் செய்துகொண்ட தற்கொலை என்று கூறி கொண்டாடி மகிழ்ந்தது. அதிலும் அண்மை காலமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி அவர்கள், இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், ‘நீட்’ தேர்விற்கு ஆதரவாகவும் பேசி, ஒன்றிய அரசிற்கு ஓயாது வெண்சாமரம் வீசி வருகிறார். ஓய்வு பெற்ற பின்பும், தான் மீண்டும் ஒரு பெரும் பதவியை அடைந்துவிட வேண்டும் என்பதற்காக, தமிழினத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும்
இ. பாலகுருசாமி அவர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயா பாலகுருசாமி உண்மையான கல்வியாளராக இருந்திருந்தால், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி உரிமையினை, இந்திய ஒன்றிய அரசு தனது கையில் அபகரித்த போதே எதிர்த்து குரல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக இப்பொழுது, உச்ச நீதிமன்றமும் தேசிய மருத்துவ ஆணையமும் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு வேண்டும் என்று உறுதிசெய்து விட்டது. எனவே நீட் தேர்வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று சூளுரைக்கிறார். எங்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு கூடத்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது…
நாங்கள் என்ன கைகட்டி வாய்பொத்தி வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தோம்?
ஐயா பாலகுருசாமி அவர்களே, யாருக்காக இந்த விஷம அச்சுறுத்தலை தமிழ் மண்ணில் விதைக்கிறீர்.

அதேபோல எங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தினை மடை மாற்றம் செய்து, ஐ.ஐ.டி., போன்று நடத்தப்போகிறோம் என “சிறப்பு அந்தஸ்துக்காக” ஒற்றைக்காலில் நின்ற ஊழல் நிறைந்த சூரப்பாவிற்கு இன்னொரு காலாக நின்றவர்தானே நீங்கள்?

நீட் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கடினமானது அல்ல என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் மிக திறமையானவர்கள் என்று நீங்கள் சான்றிதழ் வழங்குகிறீர். கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த நீட் தேர்வுக்கான கேள்வித்தாளில் நூற்றுக்கணக்கான பிழைகள் இருந்ததும், அதனால் ஆயிரக்கணக்கான எங்கள் தமிழ்ப் பிள்ளைகள் தோல்வியைத் தழுவியதும் உங்களுக்கு தெரியாதா? அப்பொழுதெல்லாம் உங்கள் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை கூட நீதி கேட்கவில்லையே?

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீட் கமிட்டியில் நடுநிலையாளர்கள் இல்லை என்கிறீர்கள். நேர்மையும் உண்மையும் சத்தியத்தையும் நெஞ்சில் ஏந்துபவர்கள் தான் நடுநிலையாளர்கள். நேர்மையற்ற ஒரு கூட்டத்தை, சுயநலத்திற்காக புகழ்ந்து புத்தகம் போடுவதும், நெஞ்சினுள் வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே காவு வாங்கி அழிக்க துடிப்பதுமாக இருக்கும் உங்களைப் போன்றவர்களை உள்ளே அனுமதித்தால், நீதியும் கெடும். நடுநிலையும் நடுத்தெருவுக்கு வந்துவிடும்.

எந்த வகையிலும் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பதற்கு தகுதியற்ற தாங்கள், எப்படி, யாரால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட நீங்கள் இந்த மண்ணின் பிள்ளைகள் உயர்கல்வி கற்பதையும் வேலைவாய்ப்பில் அமர்ந்து வசதியாக வாழ்வதையும் தடுப்பதற்காக உங்களால் எப்படி தொடர்ந்து செயல்பட முடிகிறது?
ஓய்வுபெற்று வயது போன பின்பும் இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, இதற்கு மேலும் உயர்பதவி பெற்று, வசதிகளையும் சுகங்களையும் அனுபவிக்க நினைப்பது வக்கிரத்தின் உச்சம் இல்லையா?

கோயம்புத்தூரில் நீங்கள் பணிசெய்த போதும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணி புரிந்தபோதும் நடந்த முறைகேடுகளை தோண்டி எடுத்து இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிற வேலையை எங்களுக்குக் கொடுத்து விடாதீர்கள். நேர்மை என்பதை கிஞ்சித்தும் அறியாத நீங்கள், நேர்மை கொண்ட எங்கள் தமிழ்ச் சமூகம் முன்னேறவே கூடாது என முடிவெடுத்து வேலை செய்வதை, இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் தொடர்ந்து நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். எச்சரிக்கை.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
18.06. 20 21

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments