உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முற்றாக நிராகரிக்குமாறு வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடாத்தி வரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், அச்சட்டமூலத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறு எதிர்க்கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக வெள்ளிக்கிழமைநீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைவிட மிகமோசமான இச்சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெறவேண்டுமென மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.
அதன் ஓரங்கமாக சிவில் சமூக உறுப்பினர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடாத்திவருவதாகவும், அவர்களிடம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் மிகமோசமான தன்மை குறித்து விளக்கமளித்துவருவதாகவும் அறியமுடிகின்றது.
அதுமாத்திரமன்றி உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எதிராக நிலைப்பாட்டை எடுக்குமாறு தாம் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் பிரயோகித்துவருவதாகவும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளவேண்டுமெனில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு அமைவாகவே அச்சட்டத்தை நீக்குவதாகவும், அதற்குப் பதிலீடாகவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருவதாகவும் அரசாங்கம் தமது தரப்பை நியாயப்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், எனவே இச்சட்டமூலம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இன்று நிகழ்நிலை முறைமையில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடவுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் குழுவுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.