பயங்கரவாத சட்டத்தில் கைதான வவுனியாவை சேர்ந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் போராளியான வவுனியாவை சேர்ந்த இளைஞரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர், இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்துகளில் வெடிகுண்டு வைப்பதற்காக விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வு தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை பெற்றவர் என பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களின் படங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் பேஸ்புக் கணக்கை நடத்தி,பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு, அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் பிரசாரம் செய்து வருவதாக செய்த முறைப்பாடு தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிவான், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்ததுடன், சந்தேக நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.