உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் , ஊடகங்கள் ஒருபோதும் முடக்கப்பட மாட்டாது. எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி , சிறைச்சாலை அலுவல்கள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த சட்ட மூலம் குறித்த ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும். நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கமைய தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகள் ஆரம்பமாகத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் 1979இல் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் தற்காலிக ஏற்பாடாக பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் ஊடாகவே பாரிய பயங்கரவாத செயற்பாடுகளைக் கூட நிறைவுக்கு கொண்டு வர முடிந்தது.
எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இந்த சட்டம் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக உள்ளக ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அத்தோடு எதிர்க்கட்சிகளால் இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்ட போதிலும், அவை ஆளுங்கட்சியானதன் பின்னர் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
எனினும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பாதையில் இதில் மாற்றங்களை ஏற்படுத்துவது பொறுத்தமானது என்பது இணங்காணப்பட்டது.
அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையிலும் இலங்கை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் , ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையையும் இழக்க நேரிட்டது. யுத்தத்தை நிறைவுக் கொண்டு வருவதில் முன்னின்று செயற்பட்ட முப்படையினருக்கும் சர்வதேச ரீதியில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.
இவை அனைத்தையும் கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கமைய 2016இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிக்கும் அதே வேளை, நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் மக்களின் உரிமைகளை மீறாத வகையில் புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்ட மூலத்தை தயாரிக்கும் பணிகள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணிகள் 16 பேர் அடங்கிய மதிப்பாய்வு குழுவொன்று நியமிக்கப்பட்டு, அக்குழுவினால் இந்த சட்ட மூலம் குறித்து 36 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. எனினும் இந்த தாக்குதல்களின் பின்னர் இந்த சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதற்கமைய தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தில் தடுப்புக்காவலில் வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த அதிகாரம் நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தில் ஊடகங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவை குறித்த ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டங்களையும் , ஊடகங்களையும் முடக்குவதற்காக இந்த சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை உண்மைக்கு புறம்பானவையாகும்.
நடைமுறையிலுள்ள பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் ஊடாக இவற்றை செய்ய முடியும். எனினும் புதிய சட்ட மூலத்தில் நாம் அவ்வாறான ஏற்பாடுகளை நீக்கியுள்ளோம். மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த புதிய சட்ட மூலத்தை தயாரித்துள்ளோம். மாறாக அரசாங்கத்தின் பாதுகாப்பிற்காக அல்ல.
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக ஊடகங்கள் செயற்படுமானால் அதற்குரிய நடவடிக்கைகள் சட்ட மூலத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் ஊடகவியலாளர்கள் இதன் ஊடாக பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படவோ, இதன் கீழ் கைது செய்யப்படவோ மாட்டார்கள். இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்த சட்ட மூலம் குறித்த ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும். அதற்கமைய நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கமைய வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.