ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் வயல்களில் பயிர்களை அழிக்கத் தொடங்கியுள்ளன. தற்போது ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் சூழ்ந்துள்ளதாகக் கூறும் வேளாண்மைத்துறை அதிகாரிகள், கடந்த 27 ஆண்டுகளில் வெட்டுக்கிளிகள் தற்போது மிக மோசமான தாக்குதலை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மோசமான காலத்தில் தீவிரமான பூச்சித் தாக்குதல் என சுற்றுச்சூழல்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய விவசாய அமைச்சகம் அளித்த தகவலின்படி, ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் 18, குஜராத்தில் இரண்டு மற்றும் பஞ்சாபில் ஒரு மாவட்டம் இது வரை வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விளைநிலங்களை சூழ்ந்திருக்கும் வெட்டுக்கிளிகளை ட்ரோன்கள் மூலம் மருந்து தெளித்தும், தீயணைப்பு மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பூச்சி மருந்து தெளித்தும் அவற்றை அழித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தின் புட்னி மற்றும் நஸ்ருல்லகஞ்ச் பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெட்டுக்கிளிகளை விரட்டும் முயற்சியில் பாத்திரங்களை அடித்து வருகின்றனர்.
இந்நிலையில் 5 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டத்தை அழிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பூச்சிக் கொல்லி தெளிக்கும் 89 தீயணைப்பு வாகனங்களும், 120 ஆய்வு வாகனங்களும், தெளிப்பான்கள் கொண்ட 47 கட்டுப்பாட்டு வாகனங்களும், தெளிப்பான்கள் பொருத்தப்பட்ட 810 டிராக்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானின் 8 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 7 மாவட்டங்களிலும் வெட்டுக்கிளிக் கூட்டங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மராட்டியத்தில் பூச்சிக் கொல்லி தெளித்தபோது வெட்டுக்கிளிக் கூட்டம் இரு பிரிவுகளாகப் பிரிந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விதர்ப்பா பகுதியில் 11 மாவட்டங்களுக்கும், வடக்கு மகாராஷ்டிரத்தில் 4 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் வாய்ப்புள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணெய், வேப்பமருந்துக் கரைசலைத் தெளிக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து அதற்கேற்ப இழப்பீடு வழங்கவேண்டும் என வடமாநில விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.