இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்திவரப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினர் வழக்கமான ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் குறித்த பகுதியில் நடமாட்டங்களை அவதானித்து கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையில் படகில் சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்ட கஞ்சாவை மோட்டார் சைக்கிள் மூலம் எடுத்துச் செல்ல முற்பட்டுள்ள கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் வந்து இராணுவத்தினருடன் குறித்த பகுதிக்கு சென்ற போது படகு மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.
இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 48 கிலோ கேரள கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா, படகு மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.