குளிர்காலங்களில் தமது உணவை பெற்றுக்கொள்வதற்கு சிரமப்படும் பறவையினங்களுக்கு, மக்கள் நாளாந்தம் உணவளித்து வருவது ஐரோப்பாவில் மக்களோடு ஊறிப்போன கலாச்சாரமாகவே உள்ளது. எனினும், நாளாந்தம் தமது வீடுகளைத்தேடி உணவுக்காக கூடும் பறவைகளுக்கு வருடம் முழுவதும் உணவளிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த நிலையில், நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் பல்கலைக்கழகத்தின் சூழலியல் பேராசிரியரும், பறவைகள் நிபுணருமாகிய “Tore Slagsvold” சற்று வித்தியாசமான எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளார்.
கடுமையான குளிர்காலத்தில் பறவையினங்களுக்கு உணவளிப்பதை வரவேற்கும் அவர், எனினும், கோடைகாலத்துக்கு முன்னதான இலைதுளிர் காலத்திலும் பறவையினங்களுக்கு உணவளிப்பதை நிறுத்தவேண்டுமென மக்களுக்கு அறிவுரை விடுத்துள்ளார்.
இலைதுளிர் காலத்திலும் பறவைகளுக்கு மக்கள் உணவளிப்பதால், தமக்கு தேவையான உணவு தாராளமாக கிடைப்பதாக எண்ணிக்கொள்ளும் பறவைகள், தகுந்த காலத்துக்கு முன்னதாகவே தமது இணைகளோடு கூடிக்குலாவி முட்டைகளை இட்டுவிடுவதாகவும், தகுந்த காலத்துக்கு முன்பாகவே இடப்படும் இம்முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வரும்போது கடும் குளிரான காலநிலை தோன்றிவிடுவதால், குஞ்சுகளுக்கு தேவையான இயற்கையான உணவுகளான புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு பறவைகளும், குஞ்சுகளும் வருவதால் அவை பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகவும் பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பறவையினங்கள் முட்டையிட்டு அவை பொரிக்கும் காலப்பகுதியானது, குஞ்சுகள் தமக்கான இரைகளை தாமே தேடிக்கொள்ளும் விதத்தில் புழுக்கள், சிறுசிறு பூச்சிகள் போன்றவை உண்டாகக்கூடிய தகுந்த காலநிலையாக இருப்பது அவசியமென்றும், இதன் காரணத்தினால், பறவைகள் தமது இணைகளோடு கூடிக்குலாவி முட்டைகளை இடும் காலப்பகுதி மிகமிக முக்கியமானதெனவும் தெரிவிக்கும் பேராசிரியர் “Tore Slagsvold”, குளிர்காலத்தை தாண்டியும் இலைதுளிர் காலத்திலும் மக்கள் பறவைகளுக்கு உணவளிப்பதால், பறவைககள் முட்டையிடும் காலத்தில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும், இது தடுக்கப்பட வேண்டியதெனவும் எச்சரிப்பதோடு, பறவைகள் தமக்கான உணவை தாமே தேடிக்கொள்ளும் நடைமுறையில் மனிதர்கள் மாற்றங்களெதையும் ஏற்படுத்த முனையக்கூடாதெனவும் எச்சரிக்கிறார்.