சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது.
கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. எனினும் பலி எண்ணிக்கை அச்சப்படும் அளவிலேயே காணப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 71 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 508 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன தேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.