பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக் ஒன்றில் இருந்து 18 பேர்களின் சடலங்கள் மீட்பட்ட நிலையில், அதில் பயணித்த அனைவரும் ஆப்கானிஸ்தான் புலம்பெயர் மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பல்கேரிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த டிரக்கானது சோபியா அருகே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன் சாரதி அப்பகுதியில் இருந்து தப்பியுள்ளார்.
ஆனால், பொலிசார் முன்னெடுத்த சோதனையில், குறித்த டிரக்கின் ரகசிய பகுதியில் 40 பேர்கள் கொண்ட புலம்பெயர் மக்களின் குழு ஒன்று ஒளிந்திருந்துள்ளது. உண்மையில் அந்த டிரக்கானது மரக்கட்டைகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தியுள்ளனர்.
இதில் 18 பேர்கள் சடலங்களாக மீட்கப்பட, எஞ்சியவர்களை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் 8 பேர்களின் நிலை ஆபத்து கட்டத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பேர்களின் அடையாளங்கள் இதுவரை அதிகாரிகளால் உறுதி செய்யப்படாத நிலையில், அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் என பல்கேரிய உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
2019 அக்டோபரில் பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் குளிரூட்டப்பட்ட டிரக் ஒன்றில் இருந்து 39 புலம்பெயர் மக்களின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
15 முதல் 44 வயதுடைய அந்த மக்கள் அனைவரும் வியட்நாம் பகுதியை சேர்ந்தவர்கள் விசாரணையில் அம்பலமானது. 2015 ஆகஸ்டு மாதம் ஆஸ்திரியா பிரதான சாலை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட குளிரூட்டப்பட்ட டிரக் ஒன்றில் 71 புலம்பெயர் மக்கள் மூச்சடைத்து சடலமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.