பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தமைக்கு ஒரே காரணம் இது தான்!

You are currently viewing பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தமைக்கு ஒரே காரணம் இது தான்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேசியபோது,

இம்மாதம் முதலாம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினமே இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் 25ஆவது அகவை நாளாகும்.

இனவாத அரசாங்கத்தின் கோரமுகத்தை உலகுக்கு காட்டிய பெரும் யுத்தக் குற்றச்சாட்டாக இசைப்பிரியா, பாலச்சந்திரனின் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது. இந்த படுகொலை உலக தமிழர்களின் மனங்களில் ரணமாக இன்னும் இருக்கிறது தமிழ் சிறுவர்களுக்கு உள்ள உயிர்வாழும் உரிமைக்கூட இலங்கையில் பறிக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை முதல் 2008 டிசெம்பர் 20ஆம் திகதி வரையில் 1929 இக்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியதுடன் கடந்த காலங்களில் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட பல்வேறு சம்பவங்களையும் சிறிதரன் பட்டியலிட்டார்.

இந்த உரையால் விசமனடைந்த அரச தரப்பு எம்.பி.க்கள் அவரது உரைக்குக் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.கூச்சலிட்டனர். கடும் தர்க்கம் புரிந்தனர்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், சர்வதேசத்தை இலக்கு வைத்து சிறிதரன் உரையாற்றுகிறார்.

சிறிதரன் கூறுவது எல்லாம் கடந்த காலங்களில் இடம்பெற்றவை. அப்படி என்றால் சிறிமா போதி, தலதா மாளிகை உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வைத்தபோது அதில் சிறுவர்கள் பலியாகவில்லையா? நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் நடைபெறவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் நடைபெற்றது என வாதிட்டனர்.

மேலும் சிறிதரன் எம்.பியின் இனவாத கருத்துக்களை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். எனினும் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் சிறிதரன் எம்.பி தனது உரையை தொடர்ந்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply