பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாள்!

You are currently viewing பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாள்!

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.

பெருஞ்சித்திரனார் மொழித்தளத்தில் தனித்தமிழ்க்கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார். 1950களில் முதன்முதலில் வெளிவந்த இவரது தென்மொழி இதழ் தொடர்ச்சியாக இவ்விரு கொள்கைகளையும் தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார். தமிழர்கள் குல மத வேறுபாடுகளிலிருந்து வெளியேறித் தம்மைத்தமிழர்கள் என உணர்ந்து தமிழ்நாட்டினை தனிநாடாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பது இவரது கருதுகோள் ஆகும். தமிழக விடுதலை போலவே தமிழீழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்தும் பரப்புரை செய்தும் பெருஞ்சித்திரனார் செயற்பட்டார்.

பெருஞ்சித்திரனார் தனித்தமிழ் இயக்கத்தின் கொடிவழியில் வந்த அறிஞர் ஆவார். அவரது இதழ்கள், உரைவீச்சு ஆகியவை முழுக்கவும் தனித்தமிழிலேயே அமைந்திருந்தன. மறைமலையடிகள் தொடங்கிப் பாவாணர் ஈறாக தனித்தமிழ் அறிஞர்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்ட பெருஞ்சித்திரனார் அரசியல் சார்ந்து அவர்களிடமிருந்து வேறுபட்டு விளங்கினார். நேரடியாக மக்களிடம் தனித்தமிழ்க்கொள்கை வேர்கொள்ளவேண்டி அவர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டார். தமிழ்மரபில் சிவனிய (சைவ), மாலிய(வைணவ) சமய நெறிப்பட்ட தனித்தமிழ் அறிஞர்களின் மரபுகளிலிருந்து வேறுபட்டு மதம்சாரா (secular) தனித்தமிழ் அறிஞராக இருந்தார் என்பது இவரது தனித்தன்மையாகும். இவரது தனித்தமிழ்க்கொள்கை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களையே பெரும்பாலும் அடியொற்றி அமைந்துள்ளது. தேவநேயப் பாவாணரின் மாணவரான பெருஞ்சித்திரனார் அவரது பல்வேறு தூய தமிழ்ப்பணிகளுக்குத் துணையாய் நின்றார்.

பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.

பகிர்ந்துகொள்ள