இந்திய ஒன்றியத்தில் வேகமாக பரவிவரும் “கொரோனா” வைரஸினால் பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், அதிகளவானோர் உயிரிழந்தும் வரும் நிலையில், இந்திய ஒன்றியத்தின் வடபகுதியில் நிலைமை மிக மோசமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு புனித “கங்கை” நதிக்கரையோரம் பிணங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
“கொரோனா” வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களை தகுந்த முறையில் அடக்கம் செய்யும் நடைமுறை கட்டுப்பாட்டை இழந்துள்ளதாலும், உயிரிழக்கும் உறவினர்களை உரிய முறையில் அடக்கம் செய்வதற்குரிய பொருளாதார வசதிகளை கொண்டிருக்காத மக்கள், உயிரிழந்தவர்களின் பிணங்களை “கங்கை” நதிக்கரையோரம் விட்டுச்செல்லும் அவல நிலை தோன்றியுள்ளது. இதேவேளை, கைவிடப்பட்டுள்ள பிணங்களை நாய்களும், காகங்களும் சிதைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“கொரோனா” வைரஸ் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இப்போது இந்திய ஒன்றியம் முதன்மை நாடாக இருப்பதும், இதுவரை 2,50.000 மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதிலும் 25 மில்லியன் மக்கள் தொற்றுக்கு ஆளாகியுமுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொற்றுக்குள்ளான மக்களை உள்வாங்குவதில் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் திண்டாடி வருவதோடு, அத்தியாவசிய தேவைகளான மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள் மற்றும் உயிர்வாயுவான ஒக்சிஜன் போன்றவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் தேவையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமலும் நாள்தோறும் பலர் பலியாகி வருகின்றனர்.
பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து அவசர மனிதாபிமான உதவிகளை பெற்றுக்கொள்ள விரும்பாத இந்திய ஒன்றியம், இப்போதுள்ள மோசமான நிலையில் வெளிநாடுகளிடம் அவசர உதவிகளை கோரியுள்ளது. அதனடிப்படையில் பல்வேறு நாடுகளும் அவசர மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைக்கும் நிலையில், நோர்வேயும் தனது பங்காக அத்தியாவசிய மருத்துவ உபகாரணங்களையோடு, பொருளாதார உதவிகளையும் வழங்குகிறது.
உலக சுகாதார நிறுவனம் மூலமாகவும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இந்திய ஒன்றியக்கிளையினூடாகவும் சுமார் 20 மில்லியன் நோர்வே குறோணர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நோர்வேயின் பெரு நிறுவனங்களான “Wilh. Wilhelmsen, Jotun, Statkraft, Equinor, Orkla, Kongsberg Gruppen, Yara, Hydro, DNB வங்கி மற்றும் Boots Norge” ஆகியவையும் தமது பங்காக பல மில்லியன் நோர்வே குறோணர்களை இந்திய ஒன்றியத்துக்கு வழங்கியுள்ளன.