பிரான்சில் இளைஞனின் கொலைவெறித் தாக்குதலுக்கு இருவர் பலி!

You are currently viewing பிரான்சில் இளைஞனின் கொலைவெறித் தாக்குதலுக்கு இருவர் பலி!

பிரான்ஸின் தென்கிழக்கு நகரம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் கண்டபடி வெட்டி இருவரைக் கொன்று ஐந்து பேரைப் படுகாயப்படுத்தியுள்ளார்.

தாக்குதலாளி சூடான் நாட்டு பிரஜை என்று முற்கொண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன. காயமடைந்தோரில் பெண் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார்.

Romans-sur-Isère (Drôme) நகரில் இன்று சனிக்கிழமை காலை பொருள்கள் வாங்க வெளியே வந்த பொதுமக்கள் மீது தெருவில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலாளியான 33 வயது நபரும் அவரோடு கூட வசிக்கும் நண்பர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். தாக்குதலின் நோக்கம் என்னவென்பது உடனடியாகத் தெரியவரவில்லை. எனினும் தாக்குதலாளி ஒரு மதம் சார்ந்த கோஷம் எழுப்பியதைக் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்டோர் கூறியிருக்கின்றனர்.

தொற்று நோய் நெருக்கடியால் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. லியோன் மாகாண நீதிமன்றப் பொலீஸார் சம்பவம் தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரும் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

(குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள