பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேற தயாராகிவரும் நிலையில் பிரான்ஸின் கிராமம் ஒன்றில் புதிதாகப் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்களும் அவர்களோடு தொடர்புபட்டவர்களுமே தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அரசாங்க வரைபடத்தில் தொற்று இல்லாத பகுதி என்று பச்சை நிறத்தில் குறித்துக் காட்டப்படும் Nouvelle-Aquitaine பிராந்தியத்தின் Dordogne மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் Vergt.
.
இக் கிராமத்தில் உயிரிழந்த 50 வயதுடைய ஒருவரின் மரணச் சடங்குகள் அங்குள்ள தேவாலயத்தில் ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெற்றன. ஆனால் அவர் ஒரு கொரோனா நோயாளி அல்லர். சுமார் 20 பேருடன் மட்டும் நடைபெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்ட உறவினரான ஆண் ஒருவருக்குப் பின்னர் வைரஸ் நோய் அறிகுறிகள் தென்படவே அவர் மருத்துவரை நாடியுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து மரணச் சடங்கிலும் வீட்டில் நடைபெற்ற உறவினரின் ஒன்று கூடலிலும் கலந்துகொண்ட ஏனைய பலரும் மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில் எட்டுப் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் எவருக்கும் நோய் அறிகுறிகள் இல்லை.அனைவரும் தற்போது அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக தொடர்புடைய அனைவரையும் தேடிப்பிடித்துப் பரிசோதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டுள்ளன.நூற்றுக்கு மேற்பட்டோர் சோதனைக்குட்படுத் தப்பட்டுள்ளனர் என்று Nouvelle-Aquitaine பிராந்திய சுகாதார சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது மே 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
உள்ளிருப்பில் இருந்து வெளியேறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் அடுத்து வரும் நாட்களில் வாழ்க்கை எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதற்கு இந்த மரணச் சடங்குச் சம்பவம் ஓர் உதாரணமாக ஊடகங்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
09-05-2020 (குமாரதாஸன்)