பிரான்சில் மின்னல்வேக தொடரூந்துகள் மூலம் இடமாற்றப்படும் “கொரோனா” நோயாளிகள்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing பிரான்சில் மின்னல்வேக தொடரூந்துகள் மூலம் இடமாற்றப்படும் “கொரோனா” நோயாளிகள்! “கொரோனா” அதிர்வுகள்!!

பிரான்சில், “கொரோனா” பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலிருந்து, கொரோனா நோயாளிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விரைவாக இடம் மாற்றுவதற்காக, மாற்றியமைக்கப்பட்ட மின்னல்வேக தொடரூந்துகள் பாவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா” நோயாளிகளை காவிச்செல்வதற்கு தேவையான மருத்துவ வசதிகளோடு மாற்றியமைக்கப்பட்ட இந்த மின்னல்வேக தொடரூந்தில், ஒவ்வொரு பெட்டிகளும் நன்கு நோயாளிகளை ஒரே நேரத்தில் கவனிக்கக்கூடியதான அதிதீவிர சிகிச்சை வசதிகளோடு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, 29.03.20 அன்று முதல், மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து, நாட்டின் ஏனைய பகுதிகளிலிருக்கும் வைத்தியசாலைகளுக்கு கொரோனா நோயாளிகள் இந்த மின்னல்வேக தொடரூந்துகள் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், இடம் மாற்றப்படும் நோயாளிகளை கவனிக்கவென, பிரான்ஸ் இராணுவம் அங்காங்கே தற்காலிக வைத்தியகூடங்களை அமைத்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

வழமையான வாகனங்கள் மட்டும் உலங்குவானூர்திகளை விடவும், இந்த மின்னல்வேக தொடரூந்துகள், நோயாளிகளுக்கு தேவையான அதிதீவிர சிகிச்சைகளை வழங்குவதற்கு போதுமான இடத்தை கொண்டிருப்பதாலும், தொடரூந்து மின்னல் வேகத்தில் பயணிக்கும் போதிலும், அதிர்வுகள் ஏதும் கிடையாது என்பதால், நோயாளிகளுக்கு பாதிப்புக்கள் ஏதும் இல்லாததாலும் இந்த மின்னல்வேக தொடரூந்துகளை பாவனையில் எடுத்திருப்பதாக, பிரான்சின் அவசர சுகாதாரப்பிரிவுக்கு பொறுப்பான “François Braun” தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரான்சிலிருந்து கொரோனா நோயாளிகள் அயல் நாடுகளான ஜேர்மனி, சுவிசர்லாந்து மற்றும் லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளுக்கும் கொண்டு சொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் பிரான்சில், 45.000 பேருக்கு “கொரோனா” தொற்று இருப்பதாகவும், 3.000 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 5.000 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் சுகாதாரத்துறையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள