பிரிகேடியர் சு.ப தமிழ்ச் செல்வன் அவர்களின்-16,வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் (02.11.2023) வியாழக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் நினைவு கூரப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் தலைமை காரியாலயத்தில் கட்சியின் மூத்த செயற்பாட்டாளர் பொன் மாஸ்ரர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரிகேடியர் சு.ப தமிழ்ச் செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச் சுடரினை கட்சியின் மகளிர் அணி செயற்பாட்டாளர் ராஜினி ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு திருவுருவப் படத்திற்கான மலர் மாலையினை மகளிர் அணித் தலைவி வாசுகி-சுதாகர் அணிவித்தார் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
நினைவு வணக்க உரையினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன்,மகளிர் அணித் தலைவி வாசுகி-சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் கிருபா-கிரிதரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியிருந்தனர்.
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் கடந்த 2007,ம் ஆண்டு நவம்பர் மாதம் – 02, நாள் கிளிநொச்சியில் சிறீலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சில் வீரச்சாவை தழுவிக் கொண்டார். அதேநேரம் அவருடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஆறு மாவீரர்களும் நினைவில் கொள்ளப் பட்டனர்.