பிரேசிலில் ஒரேநாளில் 3,163 கொரோனா மரணங்கள்!

You are currently viewing பிரேசிலில் ஒரேநாளில் 3,163 கொரோனா மரணங்கள்!

உலகில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா மரணங்கள் 4 இலட்சத்தை நெருங்கியுள்ளன.

நேற்று ஒரு நாளில் மட்டும் இங்கு 3,163 கொரோனா மரணங்கள் பதிவானதாக பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றுடன் நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 3 இலட்சத்து 98 ஆயிரத்து 185 -ஆக அதிகரித்துள்ளன.

உலகில் மிக அதிகளவு கொரோனா மரணங்கள் பதிவான நாடாக இதுவரை அமெரிக்கா உள்ளது. இந்நிலையில் விரைவில் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவை பின்தள்ளி பிரேசில் முதல் இடத்தைப் பிடிக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்காவில் இதுவரை 5 இலட்சத்து 70 ஆயிரத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் சமீபத்திய வாரங்களில் அங்கு தினசரி இறப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி வருகிறது.

பிரேசிலில் கோவிட்-19 நெருக்கடி நிலை சமீபத்திய மாதங்களில் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது. அங்கு தீவிர தொற்று நோய்க்கு மத்தியிலும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு மறுத்து வருவதால் நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

தீவிர வலதுசாரி முன்னாள் இராணுவ அதிகாரியான பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்க மறுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகளால் நாட்டில் இளம் வயதினர் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அத்துடன், இள வயதினர் மத்தியில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதேவேளை, பிரேசிலில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகையும் 1 கோடியே 45 இலட்சத்து 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று அங்கு 79 ஆயிரத்து 726 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

எனினும் இங்கு பரிசோதைனைகள் குறைந்த அளவிலேயே முன்னெடுக்கப்படுவதால் உண்மையான தொற்று நோயாளர் தொகை இதனைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply