பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் கோபி / குமணன், கடற்கரும்புலி மேஜர் கணேஸ் / குயிலன், தென்பராட்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் குணா, லெப். சாள்ஸ் அன்ரசி சிறப்புப் படையணி தளபதி லெப். கேணல் நவநீதன், யாழ். மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப். கேணல் அருணன் / சூட், மணலாறு மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் அன்பு, கடற்புலிகளின் மகளிர் துணைத் தளபதி லெப். கேணல் பாமா / கோதை உட்பட ஏனைய மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இவ் வெற்றிகரத் தாக்குதலில் கரும்புலிகள், கடற்கரும்புலிகள், மற்றும் தளபதிகள், போராளிகள் உட்பட 460 வரையான மாவீரர்கள் பூநகரி நாயகராக வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
11.11.1996அன்று அதிவேக டோரா பீரங்கிப் படகு மீது தாக்குதல் நடத்திய கடற்கரும்புலி மேஜர் பாரதி…
பெண்களதும் ஆண்களதும் கலகலவென்ற கதம்ப ஒலியால் அந்தச் சிறிய ஒன்றுகூடல் மண்டபம் அதிர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் கரிய உடைகள் அணிந்தவர்களாக இருந்தாலும், முகங்களெல்லாம் ஆயிரம் வோல்ற் மின்விளக்குகளைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன.
மண்டபத்தில் இருந்த ஒலி – ஒளிப்பதிவுக் கருவிகள், புகைப்படக் கருவிகளெல்லாம் அவர்களை விழுங்கிக் கொண்டிருந்தன.
கலகலப்பை மீறி, இடையிடையே வாசலைப் பார்ப்பதும் பின்னர் கதைப்பதும் சிரிப்பதுமாக இருந்தனர்.
அவர்கள் கரும்புலிகள்.தமக்கு எல்லாமுமாக இருந்து நெறிப்படுத்தி அன்பு காட்டி அரவணைத்த அந்தப் பெரும் தலைவனை இறுதியாகச் சந்திப்பதற்கு காத்திருந்தார்கள்.
கலகலத்த மண்டபமும் ‘சட்’டென அமைதியானது. கண்களில் பெருமிதமும் வேதனையும் போட்டியிட கம்பீரமான சின்னப் புன்னகையுடன் தலைவர் வந்தார். விழிகளில் ஒளியோடு நின்ற அந்த நெருப்புகளை நோக்கி வணக்கம் என்றார்.
மீண்டும் கலகலப்பு. மகிழ்ச்சிப் பெருக்கு. கதைக்கிடையில் யாரோ பாரதியை ‘சாண்டோ’ என்று கூப்பிட, தலைவர் ஏன் என்று வினவினார்.
பாரதியின் மேல் படகுகள் ஏற்றப் பயன்படுத்தும் பாரவண்டி படகுடன் தவறுதலாக ஏறியதை எல்லோரும் கதைகதையாக அவருக்குச் சொல்ல, அவர் சிரித்தவாறு பாரதியை ‘சாண்டோ’ என்று தானும் கூப்பிட்டார்.
பாரதி புன்னகைத்தாள்.
வீட்டில் கடைக்குட்டி. செல்லப்பிள்ளை. கதையும் செல்லக்கதைதான். இயக்கத்திலும் அவள் அப்படியே கதைப்பதால், தோழிகள் அவளை ‘நயினா’ என்றுதான் கூப்பிடுவார்கள்.
தாயும் மகளும் சரியான நெருக்கம். வெளியே போன பாரதி வரக் கொஞ்சம் தாமதமானாலும் தேடித் போய்விடுவார் அம்மா. ஒருநாள் பாரதி வீட்டுக்கு வரவேயில்லை. தேடித்தேடி கடைசியாக முகாமிற்குப் போய் அழுத அம்மாவிடம்,
”நீங்க அழவே கூடாது அம்மா.நான் உங்களிடம் வரவேணுமெண்டால் நீங்க அழக்கூடாது” என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டாள்.
பயிற்சி எடுக்க முன், சிலகாலம் அவள் இடம்பெயர்ந்த தீவக மக்களிடையே அரசியல் வேலை செய்தாள். இடப்பெயர்வு வாழ்வின் அவலங்களை அங்கே அவள் கண்டாள். அந்த மக்களின் கண்ணீர்தான் அவளைக் கரும்புலி ஆக்கியிருக்க வேண்டும்.
பயிற்சி ஆசிரியர் ஒருமுறை, இவளின் அணியினரை ‘சோம்பேறிகள்’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் அன்றிலிருந்து எதிலுமே பாரதியின் அணிதான் முன்னின்றது.
”பாரதியக்கா இல்லாவிட்டால் நாங்கள் இப்பவும் சோம்பேறியாத்தான் இருந்திருப்பம்” என்று நினைவு கூர்ந்தார் அந்தநேரத்தில் பாரதியின் அணியிலிருந்த ஆரணி. ஆரம்பப் பயிற்சி முடிந்ததும் வெடி மருந்துப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டாள். அதுமுடிய நீச்சல், படகோட்டம் என்பவற்றில் ஈடுபட்ட பாரதி ஒரு கலைஞராகவும் இருந்தார். நிகழ்ச்சிகளைத் தயாரிப்பாள். கவிதை எழுதுவதிலும் பெரும் ஆர்வம் இருந்தது.
”நாங்க ஒரு சண்டை செய்ய வேணும். அதுக்கு ‘அலைவேகத் தாக்குதல்’ எண்டு பெயர் வைக்க வேணும்” என்று அடிக்கடி சொல்வாள்.
கிளாலியில் மக்கள் பாதுகாப்புச் சேவையில் ஈடுபட்டபோது, பாரதியின் A.K.L.M.G பல தடைவைகள் முழங்கியிருக்கின்றது. சுகன்யா படையணியின் பொறுப்பாளராக இருந்து மண்டைதீவுச் சண்டைக்கு ஓட்டியாகச் செயற்பட்டாள். பூநகரி மீதான தவளைத் தாக்குதலின் போது, இவளது படகையும் அருகில் வந்த இன்னொரு படகையும் உலங்கு வானூர்தி தாக்க, எல்லோருமே கடலுக்குள் குதித்து நீந்தத் தொடங்கினார்கள்.
ஒரு போராளி நீரில் மூழ்கித் தத்தளித்தபடி, ”என்னைக் காப்பாற்றக்கா” என்று கத்த, திரும்பி நீந்திய பாரதி அவனின் தலையில் ஒரு குத்துவிட்டு, மயங்கியதும் கரைக்கு இழுத்தவாறு நீந்தினாள். பின்னர், கடலில் ஐந்து கடல் மைல் நீச்சல் முடிந்ததும் அவனின் செய்தி பாரதியை வந்தடைந்தது. “அக்கா உன்னாலதான் நான் இண்டைக்கு இப்படியொரு நிலைக்கு வந்திருக்கிறன்”.
பின்னர் அவன் முல்லைத்தீவில், ‘ஓயாத அலைகள்” தாக்குதலில் வீரச்சாவடைந்தது பாரதியை உலுக்கிவிட்டது.
1996இல் நளாயினி படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பாரதி ‘ஓயாத அலைகளுக்கு’ ஓட்டியாகச் செயற்பட்டாள்.
படகு ஏற்றும் பாரவண்டி படகுடன் ஏறி உடல் பலவீனமாக இருந்தபோதும், தனக்குரிய வெடிமருந்துப் படகை பிடிவாதமாகக் கேட்டு வாங்கினாள்.
“படகை நான்தான் ஓட்டுவன். என்னோட ஒரு பெண் போராளி வரட்டும்” என்று பொறுப்பாளரைக் கேட்டாள்.
அவளின் விருப்பப்படியே, மேஜர் மங்கைக்கு அடுத்ததாக, வெடிமருந்துப் படகை ஓட்டிய பாரதி, 1996.11.11 அன்று அதிகாலை காரைநகர் கடற்படைத்தளமருகே அதிவேக டோரா பீரங்கிப் படகு மீது மோதினாள். கூடவே இன்னிசையும்.
நெஞ்சம் மறப்பதில்லை 12.02.1997 தொகுப்பிலிருந்து….
இனிய தமிழீழ மக்களுக்கு கடற்கரும்புலி கப்டன் இன்னிசை எழுதிய கடிதத்திலிருந்து …
என்னினிய தமிழீழ மக்களுக்கு,
நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் எமது தலைவன் ஒரு கொடை. மக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து எமது தலைவனுடன் தோளோடு தோள் நின்று போராடுங்கள். நிச்சயம் தமிழீழம் கிடைக்கும். எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வெகு விரைவாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள்.
இப்படிக்கு
போராளி இன்னிசை
1996.05.16
ஆனையிறவு இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களால் இன்னிசையின் குடும்பம் வெற்றிலைக்கேணியிலிருந்து பருத்தித்துறைக்கு இடம் பெயர்ந்தது. இந்த இடப்பெயர்வுதான் இவளுள் போராட்ட உணர்வை விதைத்தது. வீட்டிலே மூத்தவள் இவள். பின்னால் ஆறு பேர். குடும்பப்பொறுப்பு அவளை இழுத்துப் பிடித்தாலும், வீட்டார்மேல் அவளுக்கிருந்த பாசமே நாளடைவில் அவளைப் போராடத் தூண்டியது.
1992இல் கடற்புலிகள் மகளிர் படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமில் இன்னிசைக்கும் பாரதிக்கும் இடையில்தான் பயிற்சியில் போட்டி. இருவரும் நல்ல நண்பிகள். ஆனால் எதிலும் போட்டிதான்.
பயிற்சி முடிந்ததும் மருத்துவப் போராளியாகக் கடமையாற்றிய போதே நீச்சற் பயிற்சியையும் எடுத்தாள். எந்த நேரமும் சண்டைக்குப் போகக்கூடிய தயார் நிலையில் தன்னை வைத்திருந்தாள். மருத்துவ முகாமிலே மருந்துகளை விட இன்னிசையின் கதைதான் காயங்களை, நோயை விரைவில் ஆற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும்.
கரும்புலியாகப் போகும் தன்விருப்பத்தைத் தெரிவித்து, நளாயினி படையணிக்கு வந்ததும் பாரதியை மீண்டும் சந்தித்தாள். இடையிலே பிரிந்த தோழிகள் தமது இலக்கினால் மீண்டும் ஒன்றாகினார்கள்.
தனது படகைத் தானே கழுவுவாள். தன் வேலைகள் எல்லாவற்றையும் தானே செய்து கொள்வாள். தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு எது தெரியாதோ, அதைச் சொல்லிக் கொடுப்பாள். தன்னைப் போலவே எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டும் என்று விரும்புவாள்.
இரவு நேரங்களில் தென்னை மரங்களில் ஏறி, தேங்காய் திருடி இளநீர் குடிப்பதைப்போல் அவளுக்கு சுவாரசியமான விடயம் வேறொன்றுமில்லை.
கரும்புலியாகப் போகும் போது, ஒரு பெண் போராளியுடன் போவதுதான் தனது விருப்பம் என்று பொறுப்பாளரிடம் அடிக்கடி சொல்வாள். வெடிமருந்தேற்றிய படகுடன் கடலில் அலைந்து விட்டு, இலக்குக் கிடைக்காமல் திரும்பும்போது தோழிகளின் அபாரமான அறுவைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
”இந்தமாதிரி இழுபடுகிறாய். இனி உனக்குத் தொண்ணூற்றி ஏழில்தான் சான்ஸ்”
1996-07-19 ஓயாத அலைகள் தாக்குதலின் இரண்டாம் நாள், மிதுபாலனையும் இன்னிசையையும் சுமந்த கரும்புலிப் படகு ‘ரணவிரு’வுடன் மோதியது.ஏதோ பிசகி விட்டது. படகு வெடிக்கவில்லை. ‘ரணவிரு’வின் எதிர்த்தாக்குதலால் இன்னிசை காயமுற்றாள். தவிர்க்கமுடியாமல் இருவரும் கரை திரும்ப நேரிட்டது. இன்னிசை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, 1996-07-24 அன்று மிதுபாலன், சயந்தனுடன் போய் மற்றொரு தரையிறங்கு கப்பலைத் தாக்கி காவியம் படைக்க, தனக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லையே என்ற கவலை அவளை வாட்டியது.
இன்னிசைக்கும் பாரதிக்கும் இலக்குக் கொடுக்கப்பட்டபின்னர், அவள் தன் வீட்டுக்கு விடுமுறைக்குப் போனாள். நோயால் வாடியிருந்த தாய் மகளை வீட்டுக்கு வந்து குடும்பப் பொறுப்பை ஏற்குமாறு கேட்டாள். இன்னிசை மெல்லச் சிரித்தாள்.
”கொஞ்ச நாளில வருவன் அம்மா”
நீண்ட கால அலைச்சலின் பலன் 1996-11-11 அன்று அதிகாலை இன்னிசைக்குக் கிட்டியது. காரைநகர் கடற்படைத்தளமருகே அதிவேக டோரா பீரங்கிப் படகுமீது இன்னிசையையும் பாரதியையும் சுமந்த படகு பாய்ந்தது.
தன் மகள் கடைசியாகத் தனக்குச் சொன்ன வரிகளின் பொருள் அப்போதுதான் அந்தத் தாய்க்குப் புரிந்தது.
இன்னிசை தன் குடும்பத்தினருக்கு எழுதிய கடைசிக் கடிதத்திலிருந்து ஒரு கவிதை:
நீலக்கடல் வற்றினாலும்
என் மழலைச் சகோதரர்களின் முகங்கள்
என் மனதில் அலை மோதுகின்றது
நிலவு வந்து ஒளிபரப்புகின்ற நேரத்தில்
என் பெற்றோர் அரவணைத்த
பாசப் பிணைப்பு
நெஞ்சத்தில் ததும்புகின்றது.
நெஞ்சம் மறப்பதில்லை 12.02.1997 தொகுப்பிலிருந்து…
இதே நாள் யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன் ஆகிய மாவீரர்களின் 10ம் ஆண்டு வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்