சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிபராக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரத்தில் பதவியேற்ற நிலையில் சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினம் இன்னும் சில தினங்களில் சிங்களப் பேரினவாதம் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைத்துக் கொண்டாடத் தயாராகின்றது. ஈழத்தமிழ் மக்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை, ஏனெனில் இந்நாள் வடக்குக் கிழக்கு வாழ் ஈழத்தமிழருக்கு உரிய நாள் அல்ல.
ஏற்கனவே 146679 உறவுகளைத் தொலைத்துவிட்டு ஆறாத்துயரில் இருக்கும் தமிழருக்கு சிங்களத்தின் சனாதிபதி தன் வாயாலேயே 20000 காணாமல் ஆக்கப்பட்டோரை தாம் கொன்றுவிட்டோம் என்று மறைமுகமாகக் கூறியுள்ளார். 20000ற்கு மேற்பட்ட உறவுகளை நேரடியாகவே இராணுவத்திடம் ஒப்படைத்ததற்கான சாட்சியங்கள் உள்ள நிலையில் சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும் ஏன் கைகட்டி வாய் பொத்தி மௌனமாக உள்ளன?
சிறிலங்கா அரச அதிபரால் 17.01.2020 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் இறந்துவிட்டனர், காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டோர், முறையான விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கான மரணச் சான்றிதழ் வழங்கப்படும், அவர்களுக்கான உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்ட விடயங்கள் ஈழத்தமிழ் மக்களைக் கொதிப்படைய வைத்தள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வேண்டுகின்றோம்.
தமிழர்கள் ஒற்றையாட்சிக்குள் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்பதைக் காலத்துக்குக் காலம் சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் செயல்களின் மூலம் புலப்படுத்தி வருகின்றனர். தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வது தான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு உயரிய தீர்வையும் தரும் என்பதை சர்வதேசத்திற்கு தமிழர் தொடர்ச்சியாக இடித்துரைக்க வேண்டும்.
தமிழர்கள் தங்களுக்கே உரித்தானதும் தனித்துவமானதும் ஆன மொழி, கலை கலாசாரங்கள், பாரம்பரிய உணவுமுறை, உடைப் பாரம்பரியம், வழிபாட்டு முறைகள், பண்பான பழக்க வழக்கங்கள், அன்பான வாழ்க்கை முறைகள், பூர்வீக நிலங்கள், வர்த்தகங்கள், மரபுரிமைகள் என்று பலவற்றையும் கொண்ட இனமாகையால் அவர்கள் இலங்கைத்தீவின் 2500 வருடங்களுக்கு மேலான பழங்குடி மக்கள் ஆவர். எமது உரிமைகளை என்றுமே விட்டுக்கொடுக்க முடியாது. பாலஸ்தீனிய மண் யூதர்களிடம் கரைந்து போனதுபோல எமது மண்ணை சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்த விடாமல் எதிர் நின்று பாதுகாக்க வேண்டும்.
இன்றை சூழலில் இந்தோ – பசுவிக் பிராந்தியம் வல்லரசுகளின் புவியியல் மற்றும் பொருளாதாரப் போட்டிக்குள் அகப்பட்டு அல்லாடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் ஆதிக்க அதிகாரப் போட்டிக்குள் பழத்தமிழராகிய எமது விடுதலையும் பகடைக்காயக்கப்பட்டும் சூழல் அதிகரித்துக்கொண்டே போகின்றது. நாம் பட்ட வலிகள் இலகுவில் மறந்து போவதற்கு ஒன்றும் கற்பனைகள் அல்ல. அன்னியனின் முதலீட்டுக்கு நிலம் கொடுக்கும் சிங்களம் பூர்வீகக் குடிகளான எம்மை ஆயுதமுனையில் அடக்கியொடுக்குகிறது. ஆகவே ஒவ்வொரு உலகத்தமிழரும் எமது சுயநிர்ணய உரிமைக்காக உரத்துக்குரல் கொடுக்க வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுக்கின்றது. சிறிலங்காவின் 72வது சுதந்திர தினத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஈழத்தமிழ் மக்கள் தங்கள் நிரந்தர அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு பெருமெடுப்பில் தயாராக வேண்டும் என புலத்திலும் தாயகத்திலும் உள்ள தமிழ் அமைப்புக்களுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.
”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை