உக்ரைன் விடயத்தில் பெரும் படை நடவடிக்கையொன்றுக்கு ரஷ்யா தயாராக உள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அயல் நாடான நோர்வே தனது இராணுவபலத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கவுள்ளது.
சுமார் 500.000 படைவீரர்களோடு கடுமையான இராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யத்தரப்பில் தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், எல்லை நாடான நோர்வேயும் தனது பாதுகாப்புக்காக படைபலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. அவசரமாக அமைச்சரவையை கூட்டவுள்ள நோர்வே அரசு, ரஷ்யாவால் நோர்வேக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படலாமெனவும், எனவே பாதுகாப்பை பலப்படுத்தவேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரின் பிடியிலிருந்த நோர்வேயை மீட்டுக்கொடுத்ததில் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் செம்படைக்கு பெரும் பங்குண்டு என்றாலும், உலகப்போரின் முடிவின்பின் “நேட்டோ” கூட்டமைப்பில் இணைத்துக்கொண்ட நோர்வே, பொதுவுடைமை கொள்கையை கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்தும் சக்தியாகவே பார்த்து வந்ததும், சோவியத் – அமெரிக்க பனிப்போர் காலத்திலும், அதற்குப்பின்னான தொடர்ச்சியான காலப்பகுதிகளில் அமெரிக்கா / நேட்டோ கூட்டமைப்பின் பக்கமே நின்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க / நேட்டோ முடிவுகளுக்கு அமைவாக, ரஷ்யாவுக்கெதிரான நடவடிக்கைகளில் காலத்துக்குக்காலம் காத்திரமான பங்காற்றிவரும் நோர்வே, உக்ரைன் விடயத்திலும் ரஷ்யாவுக்கெதிரான கடுமையான தடைகளை விதித்துள்ளதோடு, உக்ரைனுக்கு கனரக இராணுவ ஆயுதங்களையும், பல பில்லியன் நோர்வே குறோணர்கள் பணத்தை உதவியாகவும் வழங்கி வருகிறது.
நோர்வேயோடு நிலப்பரப்பு எல்லைகளை கொண்டிருக்கும் ரஷ்யா, நோர்வேயின் நிலப்பரப்புக்களையும் ஆக்கிரமிக்குமென்ற கருத்து நீண்டகாலமாகவே நோர்வே மக்களிடம் விதைக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது. இப்போது, உக்ரைன் விடயத்தில் ரஷ்ய இராணுவம் பெரும் நகர்வை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நோர்வேயின் நிலப்பரப்புக்களை ரஷ்யா ஆக்கிரமிக்கும் என்ற கருத்து முன்னிலைப்படுத்தப்படுவதை தொடர்ந்து, நோர்வே தனது பாதுகாப்பு நிலைகளையும் பலப்படுத்த ஆரம்பிக்கிறது.