உக்ரைன் தலைநகர் அருகே ரஷ்ய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி உக்ரைனிய பொது மக்களின் சடலங்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கும் நிலையில், சுமார் 300 சடலங்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன. உக்ரைனின் தலைநகர் கீவ்விற்கு அருகே மக்கள் அதிகம் வசிக்கும் முக்கிய நகரமான புச்சா (Bucha) நகரத்தை ரஷ்ய படையினரிடம் இருந்து உக்ரேனிய இராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அங்கு ரஷ்ய படையினரால் நூற்றுகணக்கான அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொள்ளப்பட்டு நகரத்தின் தெருக்கள் எங்கும் சிதறி கிடந்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து நகரத்தை மீண்டும் கைப்பற்றிய பின்னர் அதன் மேயர் அனடோலி ஃபெடோருக் கூறுகையில், ரஷ்யா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட புச்சாவில் “நாங்கள் ஏற்கனவே 280 பேரை வெகுஜன புதைகுழிகளில் புதைத்துள்ளோம்” என்று கூறினார்.
மேலும், நகரம் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில், தெருக்களில் சடலங்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் கூறினார். சனிக்கிழமையன்று புச்சாவில் ஒரு தெருவில் மட்டும் குறைந்தது 20 அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் கிடந்ததாக AFP தெரிவித்துள்ளது.
“இந்த மக்கள் அனைவரும், தலையின் பின்புறத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று ஃபெடோருக் கூறினார். பலியானவர்கள் ஆண்களும் பெண்களும் என்றும், அதில் 14 வயது சிறுவனைப் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
அவர்கள் நிராயுதபாணியாக இருப்பதைக் காட்டுவதற்காக பல உடல்களில் வெள்ளைக் துணியால் கட்டுகள் கட்டி இருந்தன என்று அவர் கூறினார்.
நகரத்தின் தெருக்களில் ஏராளமான கார்கள் இருப்பதாகவும், அவற்றில் குழந்தைகள், பெண்கள், பாட்டி, ஆண்கள் என குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
கொல்லப்பட்டவர்களில் சிலர் புச்சாங்கா ஆற்றைக் கடந்து உக்ரேனிய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றதாகவும், அப்போது அவர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ரஷ்ய படைகளுடனான சண்டையின் போது எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை கூற முடியாது என்றார். மூன்று அல்லது நான்கு நாட்களில், கண்ணிவெடிகள் மற்றும் வெடிகுண்டுகளை அகற்றும் வீரர்கள் (Sappers ) பச்சை விளக்கு காட்டிய பிறகு அதிகாரிகள் சடலங்களை அகற்றுவார்கள், என்றார்.