பொது முடக்கத்துக்கு மத்தியிலும் சுவிஸ் மக்கள் தனிமனித உரிமைகளுக்காக சிறிய அளவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
பேர்ண் நகரில் சனிக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்துக்கு முன்பாக கூடிய பலர் பொதுமுடக்க கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். தடையை மீறி நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சிறுவர்களும் வயோதிபர்களும் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டதால் பொலிஸார் அவர்களைத் தடுக்க முயற்சிக்கவில்லை என்று Swissinfo ஊடகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் சுகாதார விதிமுறைகளின் படி பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கட்டுப்பாடுகளை மீறி நாட்டின் பல நகரங்களில் சிறு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
சூரிச், பாஸல், பேர்ண், செங் காளன் போன்ற நகரங்களில் கடந்த வாரமும் மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்று Swissinfo தெரிவிக்கிறது.
கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டங்களை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் சுவிஸ் பணியகம் கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சுவிஸில் இதுவரை 30 ஆயிரத்து 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 833 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த மார்ச் நடுப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வந்த சுகாதாரக் கட்டுப்பாட்டு விதிகள் பலவும் நாளை இரண்டாவது கட்டமாகத் தளர்த்தப்படு கின்றன. மூன்றாவது கட்ட தளர்வுகள் ஜுன் 8ஆம் திகதி தொடங்கும்.
இதேவேளை,
சுவிஸ் தேசிய விமான சேவை நிறுவனம் குறைந்தது 20 வீதமான விமான சேவைகளை ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. சூரிச்சில் இருந்து 30 ஐரோப்பிய நகரங்களுக்கு வாரத்தில் 174 சேவைகளை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
(படம்:Swissinfo)
01-05-2020 (குமாரதாஸன்)